Actor Dhanush: நடிகர் தனுஷின் உண்மையான பெற்றோர் யார்? கண்டுபுடுச்சு சொன்ன நீதிமன்றம்
Actor Dhanush: நடிகர் தனுஷ் தங்கள் மகன் என மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த கதிரவன் மீனாட்சி தம்பதி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர்.
தனுஷ் தங்களது மகன்தான் என மதுரை மேலூர் பகுதியைச் சார்ந்த கதிரவன் மற்றும் அவரது மனைவி மீனாட்சி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவையும் நடிகர் தனுஷ் தொடர்பான வேறொரு மேல்முறையீட்டு மனுவையும் உயர் நீதிமன்ற மதுரை மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை மேலூர் பகுதியை சேர்ந்த தம்பதி கதிரேசன்-மீனாட்சி. இந்த தம்பதி கடந்த 2015ஆம் ஆண்டு மதுரை மாவட்ட மேலூர் நீதிமன்றதில் தாக்கல் செய்த வழக்கில், நடிகர் தனுஷ் தங்கள் மகன் தான் என்றும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது வீட்டை விட்டு ஓடி விட்டார் என்றும் அப்போது தாங்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர். இத்துடன் தங்களது மகன் தனுஷ் தற்போது இயக்குநர் கஸ்தூரிராஜாவின் வளர்ப்பு மகனாக உள்ளார். நடிகர் தனுஷ் பெற்றோர் பராமரிப்பிற்காக எங்களுக்கு மாதாமாதம் உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றம் மனுவினை தள்ளுபடி செய்தது. இதுமட்டும் இல்லாமல் மாவட்ட நீதிமன்றத்தில் கதிரேசன் தொடர்ந்த மனுவை எதிர்த்து நடிகர் தனுஷ் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ததால், மதுரை நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கினை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை சற்றும் எதிர்பார்க்காத கதிரேசன் தம்பதி தனுஷ் போலியான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து தனக்கு சாதகமாக தீர்ப்பை பெற்றுவிட்டார் எனக் கூறி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மீண்டும் வழக்கு தொடுத்தனர்.
இந்த மனு மீதான விசாரணை பல மாதங்களாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கிற்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், “தவறான உள்நோக்கத்தில் மனுதாரர்களான கதிரவன் - மீனாட்சி தம்பதி இந்த மனுவை தாக்கல் செய்தது மட்டுமின்றி குற்றச்சாட்டுகளை நிரூபிக்க உரிய ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை. இந்த வழக்கே ஒரு அற்பத்தனமான வழக்கு, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகின்றது” என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்தது.
இதனால் பல ஆண்டுகளாக சர்ச்சையை ஏற்படுத்திய இந்த வழக்கு இன்று அதாவது மார்ச் 13ஆம் தேதி தீர்ப்பினை எட்டியுள்ளது.