விஜயும் விக்ரமாதித்யன் கதையும் ஒன்னு...சரமாரியாக விமர்சித்த போஸ் வெங்கட்
பத்திரிகையாளர் முக்தாஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த இயக்குநர் போஸ் வெங்கட் விஜய் மீது பல்வேறு விமர்சனங்களை அடுத்தியுள்ளார்

நடிகர் , இயக்குநர் மற்றும் திமுக ஆதரவாளரான போஸ் வெங்கட் பேட்டி ஒன்றில் தவெக தலைவர் விஜய் குறித்து பேசியிருக்கும் கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
விஜயும் விக்ரமாதித்யன் கதையும் ஒன்னுதான்
15 வயதில் இருந்து 21 வயது வரை விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. நான் இளமையாக இருந்திருந்தால் கண்டிப்பாக விஜய்க்கு ஆதரவு தெரிவித்திருப்பேன். இன்று விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் அனைவரும் தங்கள் தாய் தந்தையின் பணத்தில் செளகரியமாக வாழக்கூடியவர்கள். அவர்கள் 25 வயதைக் கடந்து சமுதாயத்தை எதிர்கொள்ளும் போது தான் அவர்களுக்கு தப்பித்து செல்லும் வழிகள் அனைத்தும் கலைஞர் கொண்டு வந்ததாக இருக்கும் . அப்போது தான் திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கியத்துவம் தெரியும். நடிகர்களை நடிகர்களாக நம்புங்கள் . உங்கள் வாழ்நாளில் உங்களைச் சுற்றி இருக்கும் அரசியல்வாதிகளை விட்டுவிட்டு ஒரு வருடத்திற்கு 3 மணி நேரம் சுகம் கொடுக்க கூடிய ஒரு நடிகரை கொண்டாடுகிறீர்கள். வாழ்வியல்னா என்னவென்றே தெரியாமல் , கஷ்டமே தெரியாமல் வளர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் நடிகர்களாக உருவாகிறார்கள். பேருந்தில் போக காசில்லாமல் 10 கிலோமீட்டர் நடந்து சென்றவர்களுக்கு எப்படி இன்று இலவசம் பேருந்தின் அருமை தெரியும். சினிமாவில் பார்ப்பது போல் நிஜ வாழ்க்கையில் விஜய் கிடையாது. விக்ரமாதித்யன் கதைகளில் வரும் விக்ரமாதித்யனும் விஜயும் ஒன்றுதான். அது ஒரு பிம்பம் மட்டும்தான். அது உண்மை கிடையாது. விஜய் மக்களுக்கான ஒரு தலைவனாக மாறுவதற்கு சத்தியமாக வாய்ப்பில்லை
CM என்றால் என்னவென்று தெரியல
தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை உண்மையைப் பேசியவர்கள் இரண்டு பிரபலங்கள் . ஒன்று எம்.ஆர் ராதா மற்றொருவர் கவுண்டமணி. நான் பணத்திற்காக நடிக்கிறவன் என்று முதல் முதலில் எம்.ஆர் ராதா சொன்னார். விஜயை எனக்கு நடிகனாக ரொம்ப பிடிக்கும். ஆனால் கேரக்டராக நீங்கள் மக்களுக்கு எதிராக இருக்கிறீர்கள். கரூர் விபத்தில் 41 பேர் உயிரிழந்தவர்களுக்கு எத்தனை சூப்பர்ஸ்டார்கள் குரல் கொடுத்தார்கள்? ஒரு தலைவன் என்றால் தவறு நடந்தால் மக்களுக்காக போயிருக்க வேண்டும். ஓடிப்போய் 30 நாள் ஒளிந்துகொண்டார் . ஆனால் பழியைத் தூக்கி அரசு மேல் போடுகிறார். சிபிஐ விசாரணை என்பது சீட்டிங் என்று நீங்கள் தானே சொன்னீர்கள். பிறகு எதற்கு நீ சிபிஐ விசாரணைக்கு போன. தேர்தல் வருவதற்கு முன்பே நீ பாஜக என்று தெரிந்துவிட்டது. ஒரு நாய் ஒருத்தரை கடித்தால் கூட அந்த நாய் அங்கிருந்து ஓடாது. ஆனால் 41 பேர் உயிரிழந்துள்ள போது ஓடிட்டான். விஜயைச் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் பாஜகவை சார்ந்தவர்கள். அப்படியென்றால் விஜய் யார். விஜய்க்கு இருப்பது ஒரு பதவி ஆசை. முதலமைச்சர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் அனால் முதலமைச்சர் என்றால் என்னவென்று கூட அவருக்கு தெரியவில்லை.





















