அருள்நிதி இயக்கத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மௌனகுரு . இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சாந்தகுமார் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இந்த வெற்றியை தொடர்ந்து சாந்தகுமார் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு செம்படம்பர் 6-ஆம் தேதி மகாமுனி என்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படம் வெளியானது. இதனை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க , இந்துஜா மற்றும் மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் ஹீரோயின்களாக நடித்திருந்தனர்.
இந்த நிலையில் ட்விட்டர் பக்கத்தில் புதிதாக இணைந்துள்ள மகாமுனி படத்தின் இயக்குநர் சாந்தகுமார் தனது படம் பெற்றுள்ள விருதுகள் குறித்து தெரிவித்துள்ளார். இது குறித்த பதிவு ஒன்றினை வெளியிட்ட அவர் மகாமுனி திரைப்படம் 9 சர்வதேச விருதுகளையும், சிறந்த பிற மொழி திரைப்படத்திற்கான விருதையும் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 2 முறை விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலிலும் இடம் பிடித்ததாகவும், அதனை நினைத்து படக்குழு பெருமையடைவதாகவும் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் சாந்தகுமார் மற்றும் ஆர்யா கூட்டணியில் புதிய படம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஆர்யாவின் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு இந்த கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா நடிப்பில் இறுதியாக வெளியான டெடி படம் , ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா தற்பொழுது பா.ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை, ,சுந்தர் சி இயக்கத்தில் அரண்மை மூன்றாம் பாகம்,அமீர் சுல்தான் இயக்கத்தில் சந்தன தேவன் உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் ஆர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனந்த் சங்கர் இயக்கத்தில் தயாராகும் எனிமி படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார் என தகவல் வெளியானது இது தவிர அல்லு அர்ஜூன் நடிப்பில் ஐந்து மொழிகளில் தயாராகும் புஷ்பா படத்திலும் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.இந்த திரைப்படத்தில் ஏற்கனவே நடிகர் தனஞ்செயா மற்றும் சுனில் ஆகியோர் வில்லன்களாக நடித்து வரும் நிலையில், ஆர்யா ஒயிட்காலர் வில்லனாக வலம் வருவார் என கூறப்படுகிறது. என்னதான் படு பிஸியாக நடித்து வந்தாலும் தனது உடற்பயிற்சி மற்றும் சைக்கிள் பயணத்திற்கான நேரத்தை தவறாமல் ஒதுக்கி வருகிறாராம் ஆர்யா.