43 Years of Oru Kai Osai: 'ஒரு வார்த்தை கூட பேசாமல் பாக்யராஜ் நடித்த படம்’ - 43 ஆண்டுகளை நிறைவு செய்த ‘ஒரு கை ஓசை’ ..!
இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த ‘ஒரு கை ஓசை’ படம் வெளியாகி இன்றோடு 43 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இயக்குநர் கே.பாக்யராஜ் இயக்கி நடித்த ‘ஒரு கை ஓசை’ படம் வெளியாகி இன்றோடு 43 ஆண்டுகள் நிறைவடைகிறது.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அவரின் 2வது படமாக வெளியானது ‘ஒரு கை ஓசை’. இந்த படத்தில் பாக்யராஜ், அஸ்வினி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.
படத்தின் கதை
சிறுவயதாக இருக்கும் போது தன் கண் முன்னே தாயார் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இறந்து விடும் அதிர்ச்சியில் பாக்யராஜூக்கு குரல் போய் விடும். வாய் பேசாத முடியாதவராக வலம் வரும் அவர் தற்கொலைக்கு முயல்கிறார். அவரை அந்த கிராமத்திற்கு வரும் மருத்துவர் அஸ்வினி காப்பாற்றுகிறார். ஒரு கட்டத்தில் அஸ்வினி மேல் பாக்யராஜூக்கு காதல் ஏற்படுகிறது. அதனை சொல்லப்போகும் போது தான் அஸ்வினிக்கு ஒரு காதலர் இருந்தார் என்றும், அவர் ரயில் விபத்தில் இறந்ததும், ஒரு குழந்தை இருப்பதும் தெரிய வரும்.
அதேசமயம் முறைப்பெண்ணுக்கு முதலில் பாக்யராஜ் மீது காதல் வரும். ஆனால் அவர் அஸ்வினியை காதலிப்பது தெரிந்தவுடன் சொல்லாமல் இருந்துவிடுவார். பின்னால் முறைப்பெண்ணுக்கு அஸ்வினியின் சகோதரர் மீது காதல் ஏற்பட்டு விடும். இதற்கிடையில் ஒரு கட்டத்தில் பாக்யராஜூக்கு பேச்சு வந்து விடும். ஆனால் அவர் கடைசி வரை பேசவே மாட்டார். அதற்கான காரணம் தான் படத்தின் ட்விஸ்ட் ஆக இருக்கும்.
வித்தியாசமான பாக்யராஜ்
பொதுவாக பாக்யராஜ் என்றாலே அவரது திரைப்படத்தில் வசனம் தான் முக்கியத்துவம் பெறும். ஆனால் அவர் இந்த திரைப்படத்தில் முழுக்க முழுக்க வசனமே பேசாமல் நடித்திருந்தார். பலரும் வாய் பேச முடியாத கேரக்டரில் நடிக்க பாக்யராஜை தடுத்துள்ளனர். மேலும் படத்தின் டைட்டில் ஒரு கை ஓசை என வைத்ததுக்கும் கேள்வி கேட்டு துளைத்தெடுத்துள்ளார்கள்.
இந்த படத்தின் அஸ்வினியின் கேரக்டர், பாக்யராஜின் தன் அம்மாவின் கேரக்டரை அடிப்படையாக கொண்டு அமைத்திருந்தார். இதேபோல் சங்கிலி முருகன் கேரக்டர் தன்னுடைய ஊரான வெள்ளாங்கோவிலில் இரவு முழுவதும் சுற்றிச்சுற்றி வரும் 72 வயது முதியவரை கொண்டு அமைக்கப்பட்டது. இந்த படமே வெறும் முருகன் சங்கிலி முருகன் ஆக அழைக்கப்பட காரணமாக அமைந்தது. இன்றைக்கும் இப்படம் பார்த்தால் இது பாக்யராஜ் படமா என்ற எண்ணமே அனைவருக்கும் ஏற்படும் என்பது உண்மை