Ajithkumar: அமர்க்களப்படுத்தும் அஜித்! "அப்டேட்டே வேண்டாம்.. போட்டோவே போதும்" துள்ளிக்குதிக்கும் AK பாய்ஸ்!
நடிகர் அஜித்குமார் குட் பேட் அக்லி படத்தின் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் மிகவும் முக்கியமான பிரபலம் அஜித்குமார். உச்சநட்சத்திரமாக உலா வரும் இவரது நடிப்பில் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படம் உருவாகி வருகிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்து விட்ட நிலையில், தற்போது அஜித்குமார் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குட் பேட் அக்லியில் உலா வரும் அஜித்:
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும், வெளிநாட்டிலும் நடைபெற்று வரும் நிலையில் அஜித்குமாரின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
நீண்ட வருடங்களாக வித்தியாசமான கெட்டப்பில் உலா வராத அஜித் துணிவு படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்தார். பின்னர், குட் பேட் அக்லி படத்தில் மிகவும் மாறுபட்ட கேங்ஸ்டர் வேடத்தில் அஜித் நடிக்கிறார். இதற்கான அவரது புகைப்படங்களை இணையத்தில் ஏற்கனவே பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில், அஜித் குட் பேட் அக்லி கெட்டப்பில் ரசிகை ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. முற்றிலும் உடல் எடை குறைந்து ஒல்லியான தோற்றத்தில் அஜித் இந்த புகைப்படத்தில் காட்சி தருகிறார். மேலும், கார் ரேஸிங் பயிற்சியின்போது அஜித் தனது அணியினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு புகைப்படங்களிலும் அஜித் அசத்தலான லுக்கில் உள்ளார். அஜித் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
காத்திருக்கும் ரசிகர்கள்:
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் விடாமுயற்சி திரைப்படம் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியானாலும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதும் இதுவரை வெளியாகவில்லை. படத்தின் டீசர், ட்ரெயிலர், போஸ்டர் என பெரியளவு எந்த அப்டேட்டும் இல்லாமல் உள்ளது. ஆனால், குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த இரு படங்களில் ஒரு படத்தின் டீசர் வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துள்ளனர்.
2025ம் ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.