இப்டி சிக்கிட்டீங்களே சார்...இலவசங்கள் பற்றிய அஜித்தின் கருத்திற்கு ரசிகர்கள் கண்டனம்
Ajith Kumar : இலவச திட்டங்கள் குறித்து நடிகர் அஜித் குமார் பேசிய கருத்தை கண்டித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன

தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியா ஊடகத்திற்கு அஜித் குமார் அளித்த நேர்காணல் பெரியளவில் பேசுபொருளாகியுள்ளது. குறிப்பாக இலவச திட்டங்கள் குறித்து அஜித்தின் கருத்திற்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குடிமக்களின் பொறுப்பு என அஜித் பேசிய கருத்துக்கள் அனைத்தும் மேட்டிமை மனப்பாண்மையில் இருந்து வெளிப்படும் கருத்துக்கள் என பலர் கூறிவருகிறார்கள்.
இலவசங்கள் குறித்து அஜித் பேசியது என்ன
" என் சிறுவயதில் இருந்து எல்லாரும் உரிமைகளைப் பற்றி பேசி வருகிறார்கள். உரிமைகளோடு சேர்த்து உங்கள் கடமைகளையும் சேர்த்து பேசுங்கள். இந்த சமூகத்திற்கும் நாட்டிற்கு நாம் ஒவ்வொருத்தரும் பங்காற்ற வேண்டும். நல்ல படிங்க , வேலைக்கு போங்க சினிமாவை பொழுதுபோக்காக மட்டுமே பாருங்க. உங்களுக்கு 18 வயதாகிவிட்டது என்றால் உங்களுக்கான தலைவரை தேர்ந்து எடுக்கும் உரிமை இருக்கிறது. பிறகு ஏன் ஒவ்வொருத்தருக்கும் நாம் தனியாக ஒழுக்க நெறிகளை புகட்டிக்கொண்டே இருக்க வேண்டியதாக இருக்கிறது. உலகம் முழுவதும் ஒரு அரசின் முதன்மை பணி என்பது நாட்டை நிர்வகிப்பது. ஆனால் நாம் அரசிடம் இலவசங்களை எதிர்பார்க்கிறோம். இவை எல்லாவற்றுக்கும் கஜானாவில் பணம் எங்கே இருக்கிறது. எனக்கு அரசியல்வாதிகளைக் கண்டு பொறாமை எல்லாம் இல்லை. ஆனால் அது ரொம்ப சவாலான ஒரு பணி. உலகத்தில் உள்ள எந்த ஒரு அரசிடமும் பிரச்சனைகளை சரிசெய்யக் கூடிய மந்திர கோள் ஏதும் இல்லை. மக்களாகிய நாம் அவர்களிடம் தேவைக்கு அதிகமாக எதிர்பார்க்கிறோம். நீங்கள் எல்லா நேரமும் பெற்றுக்கொள்பவராக மட்டுமே இருக்க முடியும். இதை சொல்வதற்காக நான் விமர்சிக்கப்படலாம். ஆனால் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒவ்வொரு தனிநபராக நம் கடமைகளை செய்ய வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன். அப்படி செய்தால் இன்னும் மூன்று தலைமுறைகளில் இந்த உலகம் ஒரு நல்ல இடமாக மாறும் என்று நான் நம்புகிறேன்" என அஜித் பேசியுள்ளார்
அஜித் கருத்திற்கு கண்டனம்
இந்த நேர்காணலில் அஜித் பேசிய பெரும்பாலான விஷயங்களை பாராட்டுக்களைப் பெற்றாலும் இலவசங்கள் குறித்த அவரது இந்த கருத்து பரவலாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சமூக பொருளாதார மற்றும் சாதிய ரீதியிலான ஏற்றத் தாழ்வுகளைப் பற்றிய எந்த ஒரு புரிதலும் இல்லாமல் அஜித் பேசுவதாகவ பலர் அவரை விமர்சித்து வருகிறார்கள். குடிமக்கள் தங்களது கடமையை செய்யவேண்டும் என்று சாமானிய மக்களின் மேல் அஜித் ஒரு பெறும் சுமையை ஏற்றி வைக்கிறார். பல்வேறு அரசியல் மற்றும் முதலாளித்துவ ஆதாயத்திற்காக சாமானிய மக்கள் தொடர்ச்சியாக அறிவின்மையை வைக்கப்பட்டிருக்கிறார்கள். அஜித்தின் சொந்த துறையான சினிமாவிலும். சமூக பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னுக்கு கொண்டு வரும் திட்டங்களை அவர் இலவச திட்டங்கள் என்று குறிப்பிடுவதும் எல்லாரும் படித்து வேலைக்கு போய் தங்களது கடமையைச் செய்தால் இந்த நாடு முன்னேறிவிடும் என்றும் அஜித் பேசுவது அவது மேட்டிமைத் தனத்தையே வெளிப்படுத்துகிறது.





















