சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டேன்.. மனம் உடைந்து போனேன்.. அமீர்கான் ஓபன் டாக்
சித்தாரே ஜமீன் பர் படத்தில் நடிப்பதற்கு முன்பு சிவகார்த்திகேயனிடம் அமீர்கான் மன்னிப்பு கேட்டதாக தெரிவித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் கடந்தவாரம் வெளியான சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் இப்படம் குறித்த நேர்காணலில் பேசிய அமீர்கான், சிவகார்த்திகேயன் குறித்து பேசியுள்ளார். மேலும், இப்படம் குறித்த பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்திருப்பது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
100 கோடி வசூல்
சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் ஸ்பானிஷ் படத்தின் ரீமேக் ஆகும். கடந்த 2018ஆம் ஆண்டு சாம்பியன் என்ற பெயரில் வெளியானது. இப்படத்தை அமீர்கான் தனது நிறுவனத்தின் பெயரிலேயே தயாரித்து நடித்துள்ளார். ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியுள்ளார். அமீர்கானுடன் ஜெனிலியாவும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் இதுவரை ரூ.100 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
மனம் உடைந்து போனேன்
சித்தாரே ஜமீன் பர் படத்தில் முதலில் நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் இப்படத்தை தயாரிக்கவே முடிவு செய்ததாக அமீர்கான் பேசியுள்ளார். இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்காக பேட்டியளித்த அவர், லால் சிங் சத்தா படத்தின் தோல்விக்கு பிறகு சினிமாவில் பிரேக் எடுத்துக்கொள்ளலாம் என்றே நினைத்தேன். அப்படம் என்னை மனதளவில் பாதிப்பை தந்தது. மனம் உடைந்து போனேன். இதையும் இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னாவிடம் கூறினேன். அவர்தான் என்னிடம் சார் நீங்க நடிக்கலைனாலும், படங்களை தயாரிப்பாளராக சினிமாவில் தொடருங்கள் என்று அவர் என்னிடம் கூறினார். அதன்பிறகே படங்களை தயாரிக்க முடிவு செய்ததாக அமீர்கான் தெரிவித்தார்.
சித்தாரே ஜமீன் பர் தயாரிக்க காரணம்
சித்தாரே ஜமீன் பர் படத்தின் கதையை முதலில் ஃபர்ஹான் அக்தர் மற்றும் சிவகார்த்திகேயனிடம் கூறினோம். இப்படத்தின் கதை இருவருக்கும் ரொம்ப பிடித்திருந்தது. இதனால், தமிழ் மற்றும் இந்தியில் இப்படத்தை எடுக்க முடிவு செய்தோம். தமிழில் சிவகார்த்திகேயனும், இந்தியில் ஃபர்ஹான் அக்தரும் நடிக்க இருந்தார்கள். சிவகார்த்திகேயனிடம் படத்தில் நடிப்பதற்கான ஓப்பந்தம் செய்து கால்ஷீட் வாங்கியாச்சு. ஆனால், கதை விவாதத்தின் போது சித்தாரே ஜமீன் பர் படத்தின் கதையில் நான் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற யோசனை வந்தது.
சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு
இப்படத்தில் நடிப்பதற்கான விருப்பத்தை இயக்குநரிடம் தெரிவித்தேன் அவரும் ஏற்றுக்கொண்டார். பிறகு, ஃபர்ஹான் அக்தரிடமும், சிவகார்ததிகேயனிடமும் இதுகுறித்து தெரிவித்தேன். இருவருக்கும் இது ஏமாற்றமாக இருந்தது. சிவகார்த்திகேயனிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரினேன். அவரும் புரிந்துகொண்டார். பிறகுதான் இப்படத்தில் நடித்து முடித்தேன் என அமீர்கான் தெரிவித்தார்.





















