T20 WC ENG vs SL: தட்டுத் தடுமாறிய இ்ங்கிலாந்து! பவுலிங்கில் மிரட்டிய இலங்கை - சூப்பர் 8ல் வெற்றி யாருக்கு?
T20 WC 2026: டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கைக்கு 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 போட்டிகள் நேற்று தொடங்கியது. இதில் முதலாவது போட்டி நேற்று ரத்தான நிலையில், இன்று நடந்த 2வது போட்டியில் பல்லேகலாவில் இலங்கை - இங்கிலாந்து அணிகள் மோதியது.
தள்ளாடிய இங்கிலாந்து:
இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் - பட்லர் நிதானமாக ஆடினர். இலங்கை அணியின் ஆட்டம் அனல்பறக்கும் வகையில் அமைந்தது. பட்லர் 14 பந்துகளில் 7 ரன்களில் அவுட்டாக, அடுத்து வந்த ஜேக்கப் பெத்தேல் 3 ரன்களில் அவுட்டானார்.
பில் சால்ட் போராட்டம்:
பவர்ப்ளேவிலே 2 விக்கெட்டுகளை இழந்த இங்கிலாந்து குறைவான ரன்களே எடுத்தது. அடுத்து வந்த டாம் பன்டன் 6 ரன்களில் அவுட்டாக, கேப்டன் ஹாரி ப்ரூக் வந்தவுடன் அதிரடியாக ஆடினார். அவர் 7 பந்துகளில் 14 ரன்களுடன் அவுட்டாக இங்கிலாந்து திணறியது.
இலங்கை அணி துனித் வெல்லலேகா, தீக்ஷனா, மதுசங்கா ஆகியோரின் பந்துவீச்சால் நெருக்கடி தந்தது. பில் சால்ட் மட்டும் நிதானமாக ஆடினார். ஆனால், அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் யாரும் ஆடாததால் இங்கிலாந்தால் ரன்கள் எடுப்பது சிரமமாகவே இருந்தது.
சிறப்பாக ஆடி அரைசதம் கடந்த பில் சால்ட் தனி ஆளாக போராடி இங்கிலாந்தை 100 ரன்களை கடக்கவைத்தார். ஆனால், அவர் 40 பந்துகளில் 6 பவுண்டரி 2 சிக்ஸருடன் 62 ரன்கள் எடுத்து 15வது ஓவரில் அவுட்டானார். அதன்பின்னர், வந்த வில் ஜேக்ஸ் மட்டும் அடுத்தடுத்து பவுண்டரிகள் விளாசி ஆறுதல் தர, அவரையும் 21 ரன்களில் அவுட்டாக்கியது இலங்கை. கடைசியில் 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்தது இங்கிலாந்து.
மிரட்டல் பவுலிங்:
இலங்கை அணிக்காக சுழற்பந்துவீச்சாளர் வெல்லேலகே 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீக்ஷனா, மதுசங்கா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தற்போது 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களமிறங்கி ஆடி வருகிறது.
மைதானம் சுழலுக்கு ஒத்துழைப்பதால் இங்கிலாந்து அணியும் பதிலுக்கு சுழல் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணியில் அடில் ரஷீத், டாவ்சன், வில் ஜேக்ஸ், ஹாரி ப்ரூக் ஆகியோர் உள்ளனர். ரஷீத் பிரதான சுழற்பந்துவீச்சாளர் ஆவார்.
இவர்கள் மட்டுமின்றி வேகத்தில் அசத்த ஆர்ச்சர், ஓவர்டன், சாம் கரண் உள்ளனர். பந்துவீச்சில் இங்கிலாந்து அசத்தினால் இந்த போட்டியில் வெற்றி அவர்களது வசப்படும். அதேசமயம், சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு அணியும் 3 போட்டிகளில் ஆட உள்ள நிலையில், ஒவ்வொரு வெற்றியும் அவசியம் என்பதால் இலங்கையும் வெற்றி பெற போராடும்.



















