ஆஹா என்ன வரிகள் 4: "மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்" பாரம் குறைக்கும் இளையராஜா வரிகள்!
Aaha Enna Varigal Series 4: ஆஹா என்ன வரிகள் தொடரில் காலத்தை கடந்து நிற்கும் பாடல் வரிகள் பற்றி அலசி ஆராய்ந்து வருகிறோம்.
இந்திய திரையுலகங்களில் மற்ற திரையுலகங்களை காட்டிலும் தமிழ் திரையுலகில் தத்துவ பாடல்களும், ஆறுதல் பாடல்களும் அளவுக்கு அதிகமாக வெளிவந்துள்ளது. அதற்கு ஆயிரக்கணக்கான பாடல்கள் உதாரணமாக இருக்கிறது.
ஆறுதல் தரும் ஆனந்த ராகம்:
தொடர்ச்சியாக பல பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஒரு மனிதன், தொடர் தோல்விகளை சந்தித்திருக்கும் ஒரு மனிதன், ஏமாற்றங்களை மட்டுமே எதிர்கொள்ளும் ஒருவன், மனக்கவலைகளால் நொந்து போகியிருக்கும் ஒருவன் ஒரு கட்டத்திற்கு மேல் இனி நடப்பது நடக்கட்டும், இனி எதுவும் நம் கையில் இல்லை இனி அனைத்தையும் இறைவன் பார்த்துக் கொள்வான் என்ற எண்ணத்திற்கு வந்துவிடுவான்.
அந்த எண்ணத்தை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு பாடல்தான் “மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்”. குடும்ப பிரச்சினை, பணப்பிரச்சினை என பல பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கும் ஒரு மனிதனுக்கு இந்த பாடல் மிகப்பெரிய மருந்தாக அமைகிறது. மனிதனின் ஒவ்வொரு விதமான உணர்வுக்கும் இசையமைத்து தந்த இளையராஜாவே, இந்த பாடலுக்கும் இசையமைத்துள்ளார்.
மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்:
இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பாடலில் இடம்பெற்ற ஆறுதலான வரிகளை வாலியோ, வைரமுத்தோ எழுதவில்லை. இந்த பாடல் முழுவதும் இளையராஜாவே எழுதியுள்ளார். குறிப்பாக, இந்த பாடலின் தொடக்க வரியே நமக்கு மிக மிக ஆறுதலாக நம்மை தேற்றுவது போல அமைந்திருக்கும். அந்த வரிகள்,
“ மரத்தை வச்சவன்..
தண்ணி ஊத்துவான்..
மனசை பாத்துதான்..
வாழ்வை மாத்துவான்”
என்ற வரிகளை எழுதியிருப்பார். நாம் எப்பேற்பட்ட சிக்கல்களை எதிர்கொண்டாலும், நமக்கு அந்த பிரச்சினைகளை தந்த இறைவனே அந்த பிரச்சினைகளுக்கான தீர்வையும் தருவான் என்ற பொருளில் இந்த வரிகள் இருக்கும். மேலும், எண்ணம்போல வாழ்க்கை என்ற வார்த்தைக்கு ஏற்ப "மனசை பார்த்துதான் வாழ்வை மாற்றுவான்" என்ற வரிகள் எழுதப்பட்டிருக்கும். எந்த சூழலிலும், அடுத்தவர் வாழ்வை கெடுக்காமல் நேர்மையாக நடந்து கொண்டால் நிம்மதியான வாழ்க்கை அமையும் என்ற அர்த்தத்தில் இந்த வரிகள் அமைந்திருக்கும்.
இன்னொரு இடத்தில்
“ஏ மனமே கலங்காத..
வீணாக வருந்தாதே..
பாரங்கள் எல்லாமே..
படைத்தவன் எவனோ அவனே சுமப்பான்”
என்று எழுதியிருப்பார்.
கவலைகளை நினைத்து கலங்காமல் கடவுள் மேலே பாரத்தை போட்டுவிட்டு, அடுத்த வேலையை பாருங்கள் என்ற அர்த்தத்தில் இந்த வரிகளை இளையராஜா எழுதியிருப்பார். இந்த வரிகள் மனதிற்கு மிக, மிக ஆறுதலாக அமைந்திருக்கும்.
படைத்தவன் துணையிருக்க பயம் எதற்கு?
இதே பாடலில் மற்றொரு இடத்தில் எழுதியிருக்கும் வரிகள் நமக்கு ஆறுதல் மட்டுமின்றி தன்னம்பிக்கையையும் ஊட்டும் விதமாக அமைந்திருக்கும். அந்த வரிகள்,
“ படைத்தவனின் துணையிருக்க..
அடுத்தவனின் துணை எதற்கு..?
இதயத்திலே துணிவிருக்க..
வருத்தம் இங்கே உனக்கெதற்கு?..”
என்ற வரிகள் இளையராஜாவின் இசை நம்மை வருடிச் செல்வது போல, பல பிரச்சினைகளால் கலங்கி நிற்கும் மனிதனுக்கு புது தன்னம்பிக்கையை பாய்ச்சுவது போல அமைந்திருக்கும். எப்பேற்பட்ட இன்னல்கள் வந்தாலும் அடுத்தவரை நம்பி வாழ வேண்டிய அவசியம் இல்லை, இறைவன் பார்த்துக்கொள்வான், துணிச்சலோடு கடந்து செல் என்ற நம்பிக்கையை நான்கே வரிகளில் இளையராஜா நம் உள்ளே செலுத்தியிருப்பார்.
ஓம் சாந்தி ஓம்:
இவையனைத்திற்கும் மேலாக இந்த பாடலில்
"ஓம் சாந்தி.. ஓம்..
ஓம் சாந்தி.. ஓம்.."
என்ற வரிகள் மூலம் மனமே அமைதி கொள். அனைத்தும் சரியாகும். நம்பிக்கை கொள் என்று நம்மை ஆசுவாசப்படுத்தியிருப்பார் இளையராஜா.
ரஜினிகாந்த் நடிப்பில் 1990ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில் வெளியான பணக்காரன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை, இன்று வரை பலரும் கேட்டு தங்களை ஆறுதல்படுத்திக் கொள்கின்றனர். இரவில் தூக்கமில்லாமல் தவிக்கும் பலருக்கும் இந்த பாடல் தூக்கம் தரும் நிவாரணியாகவும் உள்ளது. காலத்தை கடந்து நிற்கும் இந்த பாடலைப் போல, வேறு ஒரு பாடலுடன் அடுத்த தொடரில் சந்திக்கலாம்.
மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 3: "யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு" காதல் துணையை இழந்த ஆணின் வலி!
மேலும் படிக்க: ஆஹா என்ன வரிகள் 2: "மெத்த வாங்குனேன் தூக்கத்தை வாங்கல..." ஆறுதலாக வருடும் பூங்காற்று திரும்புமா!