A.R.Rahman: பாலிவுட்னு சொல்ல மாட்டேன்... இந்தியா முழுவதும் பல திறமைசாலிகள் உள்ளனர்... ஏ.ஆர்.ரஹ்மான் பளிச்!
உலகமே பாலிவுட் என்றால் இந்தி திரையுலகம் என தவறாக நம்பிக்கொண்டு இருக்கிறது. ஹாலிவுட் என்ற வார்த்தையில் இருந்து வந்தது தான் பாலிவுட். இந்த வார்த்தையை நான் பயன்படுத்துவதில்லை.
90களில் தமிழ் சினிமாவில் ஒரு புயலைப் போல அனைவரையும் தாக்கியவர் இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான். தென்னிந்திய சினிமா, பாலிவுட் மட்டுமின்றி சர்வதேச அளவில் தனது பெயரை நிலைநாட்டிய ஏ.ஆர். ரஹ்மான் திரைத்துறையில் 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இசை மூலம் ரசிகர்களை மதிமயங்க வைத்த ஏ.ஆர். ரஹ்மான், சிறு வயது முதலே இசையில் ஆர்வம் கொண்டு இருந்ததால் அதன் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தார். எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா போன்ற இசை ஜாம்பவான்களின் இசைக்குழுவில் பணியாற்றியவர். பின்னாளில் லண்டன் இசைக்கல்லூரியில் ஸ்காலர்ஷிப் பெற்றார்.
திரையுலகில் அறிமுகம் :
விளம்பரப் படங்களுக்கு இசையமைத்து வந்தவரை 1992ஆம் ஆண்டு வெளியான 'ரோஜா' திரைப்படம் மூலம் திரையுலகத்திற்கு இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். ‘என்னடா இது புதுசா இருக்கே’ என அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு முதல் படமே தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.
அடுத்து அவர் எடுத்து வைத்த அடி அனைத்துமே வெற்றிப்படிகளாகவே இருந்தன. 'ஸ்லம்டாக் மில்லியினர்' படத்துக்காகவும் ஜெய் ஹோ பாடலுக்காகவும் ஆஸ்கர் விருது மற்றும் கோல்டன் குளோப் விருதையும் கைப்பற்றியவர். இப்படி நம்பர் 1 இசையமைப்பாளராகத் திகழும் ஏ.ஆர். ரஹ்மான், தனது 30 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்ததை முன்னிட்டு நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
பாலிவுட் பற்றி ஏ.ஆர். ரஹ்மான் கருத்து :
அதில் அவர் பேசுகையில் “உலகமே பாலிவுட் என்றால் இந்தி திரையுலகம் என தவறாக நம்பிக்கொண்டு இருக்கிறது. ஹாலிவுட் என்ற வார்த்தையில் இருந்து வந்தது தான் பாலிவுட். இந்த வார்த்தையை நான் பயன்படுத்துவதில்லை. அப்படி யாராவது பயன்படுத்தினாலும் நான் அவர்களை திருத்துவேன்.
ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம் பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை கைப்பற்றியதில் மிக்க மகிழ்ச்சி.
இந்தியா வானவில் போன்றது :
இங்கும் அற்புதமான திறமைசாலிகள் பலர் இருக்கிறார்கள். அவர்களை இந்த உலகத்துக்கு அடையாளப்படுத்த வேண்டியது அவசியம். அவர்களுக்கு தேவையான நிதி உதவிகளும் வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டால் நிச்சயம் அவர்களும் நல்ல படைப்புகளுடன் வெளிய வர முடியும்.
அவர்கள் மூலம் வெளிவரும் படைப்புகள் இந்தியாவை போல பலதரப்பட்டதாக இருக்க வேண்டும். இந்தியா என்பது வெறும் ஒரு கலாச்சாரம் மட்டும் கொண்டது அல்ல. வானவில்லைப் போல பல வண்ணமயமான கலாச்சாரங்களின் கூட்டணி தான் இந்தியா.
நான் ஆசிர்வதிக்கப்பட்டவன் :
திரைப்படங்களுக்கு இசையமைத்ததால் மட்டுமே உதவிகள் கிடைக்குமென்பதை ரோஜா படத்துக்கு இசையமைக்கும் முன் உணர்ந்தேன். எனக்கு மணிரத்னம், ராம்கோபால் வர்மா, ஷங்கர், சுபாஷ் போன்ற பல நல்லுள்ளம் கொண்ட நண்பர்களும் உறவுகளும் கிடைக்கப் பெற்று ஆசிர்வதிக்கப்பட்டேன்” எனத் தெரிவித்து இருந்தார் ஏ.ஆர். ரஹ்மான்.