விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பானை சின்னமா இல்ல உதயசூரியன் சின்னமா? - குழப்பத்தில் மக்கள்... விழிபிதுங்கி நிற்கும் திமுகவினர்
நாடாளுமன்ற தேர்தலில் பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அமைச்சர் உதயநிதி, அமைச்சர் பொன்முடி, என பலர் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதனால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14 ஆம் தேதி தொடங்கி 21 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இடைத்தேர்தலில் போட்டியிட 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வேட்பு மனு தாக்கலில் 55 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனு மீதான பரிசீலனை நேற்று முன்தினம் விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.
இடைத்தேர்தலில் போட்டியிட 64 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வேட்பு மனு தாக்கலில் 55 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் முக்கிய மூன்று கட்சிகளின் வேட்பாளர்களான திமுகவை சார்ந்த வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக வேட்பாளர் சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயா ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டன.
இந்த நிலையில், நேற்று மாவட்ட ஆட்சியர் பழனி விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகளுடன் மாதிரி வாக்கு பதிவு, வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியீடு மற்றும் சின்னம் ஒதுக்குதல் மற்றும் வாக்கு எண்ணிக்கை இடம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த முக்கிய மூன்று கட்சிகளின் வேட்பாளர்களான திமுகவை சார்ந்த வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னமும் ,பாமக வேட்பாளர் சி. அன்புமணிக்கும் மாம்பழம் சின்னமும், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அபிநயாவிற்கு மைக் சின்னமும் ஒதுக்கப்பட்டன. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் நான்கு பேர் பானை சின்னம் வேண்டுமென்று கேட்டிருந்ததால் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் குலுக்கல் முறையில் பானை சின்னத்தை சிவசக்தி என்பவருக்கு ஒதுக்கீடு செய்தார்.
இடைத்தேர்தலில் பானை சின்னம் இடம்பெற்றதால் திமுகவினர் அதிருப்தியில் உள்ளனர். நேற்று மாலை நடைபெற்ற திமுக இளைஞர் அணி கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் பொன்முடி இடம் பானை சின்னம் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தனர். அப்போது கடுப்பான அமைச்சர் பொன்முடி அருகில் இருந்தவர்களை திட்டி தீர்த்தார். தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர் என அனைவரையும் தொடர்பு கொண்டு சின்னத்தை வழங்கக் கூடாது என அதற்கு மாற்று ஏற்பாடு செய்யுங்கள் என தொலைபேசி மூலம் வற்புறுத்தினார். இருப்பினும் சின்னம் ஒதுக்கப்பட்டு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதால் அதனை மாற்றம் செய்ய முடியாமல் அதிகாரிகள் விழி பிதுங்கி நின்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி இளைஞர்களிடம் பேசும்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பானை சின்னத்தை வைத்து திசை திருப்புவதற்காக சுயேட்சை வேட்பாளருக்கு வழங்கப்பட்டுள்ளது இது தேர்தல் ஆணையத்தின் வேலை என்றும் வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடந்த மாதத்திற்கு முன்பு பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு அமைச்சர் பொன்முடி, அமைச்சர் உதயநிதி என பலர் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் சுமார் 90,000 வாக்குகள் பானை சின்னத்திற்கு கிடைத்தது. தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பானை சின்னம் சுயேட்சை வேட்பாளருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலின் போது சுவர் விளம்பரம் பானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வரையப்பட்டிருந்தது தற்போது வரை அகற்றப்படாமல் இருப்பதினால் பொதுமக்கள் பானை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று எண்ணத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.