(Source: ECI/ABP News/ABP Majha)
Vikravandi By Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியது
வேட்புமனு தாக்கல் இன்று ஜூன் 14 தொடங்குகிறது. வரும் 21-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 24ம் தேதி நடைபெறும்.
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது.
விழுப்புரம் மாவட்டம் பிடாகத்தை அடுத்த அத்தியூர் திருவாதி கிராமத்தை சேர்ந்தவர் நா.புகழேந்தி. விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.
இதையடுத்து அந்த சட்டமன்ற தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வேட்புமனு தாக்கல்
இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் ஜூன் 14 தொடங்கியது. வரும் 21-ம் தேதி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை வரும் 24ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்ப பெற வரும் 26ம் தேதி கடைசி நாளாகும். அன்றே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 10-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, ஜூலை 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக, வட்ட வழங்கல்அலுவலர் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்தல் ஆணையம் கண்காணிப்பில் உள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை செய்து வருகிறார்.
மக்களவைத் தேர்தலில் 40/40 வெற்றி பெற்றுள்ள திமுக கூட்டணி, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தலை கருதுகிறது. திமுக வேட்பாளராக மாநில விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக, பாஜக கூட்டணியில் இதுவரை வேட்பாளர்கள் அறிவிக்கவில்லை.
மேலும், திமுகவில் தேர்தல் பணிக் குழுவும் அமைக்கப்பட்டு, விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறும் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்று, தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்துகின்றனர்.
அதிமுக தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாம் தமிழர் கட்சி, பாஜக கூட்டணி வேட்பாளர் குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.
மேலும், இன்று அஷ்டமி என்பதால் யாரும் வேட்பு மனுவைப் பெறவோ, தாக்கல் செய்யவோ வர மாட்டார்கள். வார இறுதி விடுமுறை மற்றும் திங்கள்கிழமை பக்ரீத் விடுமுறை முடிந்து, செவ்வாய்க்கிழமை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.