கோவை மாநகராட்சி துணை மேயராக இரா.வெற்றிச்செல்வன் போட்டியின்றி தேர்வு..
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லம் அமைந்துள்ள 92 வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இரா.வெற்றிச்செல்வன் அதிமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
![கோவை மாநகராட்சி துணை மேயராக இரா.வெற்றிச்செல்வன் போட்டியின்றி தேர்வு.. Vetriselvan elected unopposed as Deputy Mayor of Coimbatore corporation கோவை மாநகராட்சி துணை மேயராக இரா.வெற்றிச்செல்வன் போட்டியின்றி தேர்வு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/04/67dbcc911a1f1a7b37509a440400ad10_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் இன்று கோவை மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. திமுக சார்பில் மேயர் பதவிக்கு கல்பனா ஆனந்தகுமாரும், துணை மேயர் பதவிக்கு வெற்றி செல்வனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு இருந்தனர். இதனைத் தொடர்ந்து இன்று காலை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. அதில் கோவை மாநகராட்சியின் ஆறாவது மேயராக கல்பனா ஆனந்தகுமார் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் மற்றும் திமுக மேயர் என்ற பெருமையை பெற்றார்.
இதனைத் தொடர்ந்து இன்று மதியம் துணை மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. கோவை மாநகராட்சி தேர்தலில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் இல்லம் அமைந்துள்ள 92 வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் இரா.வெற்றிசெல்வன் அதிமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். இந்நிலையில் அவரை கோவை மாநகராட்சியின் துணை மேயர் பொறுப்புக்கு அவரது பெயர் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்ற துணை மேயர் தேர்தலுக்கு இரா.வெற்றிசெல்வன் மட்டும் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், வெற்றி செல்வன் வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அலுவலரான கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா அறிவித்ததார். மேலும் வெற்றி செல்வனுக்கு வெற்றி சான்றிதழும் வழங்கினார். இதையடுத்து மேயர் கல்பனா, திமுக நிர்வாகிகள் மற்றும் சக கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வெற்றி செல்வன், தனது வாய்ப்பளித்த முதலமைச்சர், அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோருக்கும் வாக்களித்த வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், கோவை மாநகரத்தில் நிலவி வரும் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க விரைவான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
கருமத்தம்பட்டி நகராட்சி துணைத்தலைவர்
திமுக கூட்டணியில் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று காலை நடந்த நகராட்சி தலைவர் தேர்தலில் திமுகவைச் சேர்ந்த மனோகரன் என்பவர் போட்டியிட்டார். 27 கவுன்சிலர்கள் கொண்ட கருமத்தம்பட்டி நகராட்சியில், 22 வாக்குகள் பெற்று திமுகவை சேர்ந்த மனோகரன் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பாலசுப்பிரமணியம் 5 வாக்குகளை பெற்றார். இந்நிலையில் கருமத்தம்பட்டி திமுகவினரின் இந்த செயலை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கருமத்தம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து கருமத்தம்பட்டி 6 வது வார்டு பகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யுவராஜ் என்பவரை திமுகவினர் அவசர அவசரமாக துணைத் தலைவர் பதவிக்கு நிறுத்தினர். இன்று பிற்பகல் நடைபெற்ற துணைதலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் யுவராஜ் 22 வாக்குகள் பெற்று துணைத் தலைவராக தேர்வானார். கூட்டணி அறத்தை மீறி கருமத்தம்பட்டி நகராட்சித் தலைவர் பதவியை தட்டிப்பறித்த திமுகவினர், ஏமாற்றமடைந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை சமரசப் படுத்துவதற்காக துணைத் தலைவர் பதவியை வழங்கி இருப்பதும், இந்த நகராட்சி தேர்தலில் அதிமுக கவுன்சிலர்களும் பங்கேற்று வாக்களித்ததும் குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)