தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் - பள்ளித் தோழிகள், வார்டன்களிடம் சிபிஐ விசாரணை
விடுதியில் வார்டனாக சேர்ந்த 2 மாதங்களே ஆன காயத்திரி என்பவரிடமும், மாணவி வயிற்று வலியால் துடித்தபோது, அவருக்கு முதலுவதி சிகிச்சை அளித்த ஒய்வு பெற்ற அரசு செவிலியர் ஜெசிந்தா என்பவரிடம் விசாரணை
அரியலுார் மாவட்டம், வடுகபாளையத்தைச் சேர்ந்த, 17 வயது மாணவி, தஞ்சாவூர் மாவட்டம், மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். இவர், விடுதியில் தங்கியிருந்த போது கடந்த ஜனவரி 9 ஆம் தேதி பூச்சிமருந்து குடித்து, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி ஜன. 19 ஆம் தேதி இறந்தார். விடுதி வார்டன் சாகயமேரி தன்னை, விடுதியில் அறையை சுத்தம் செய்ய சொன்னதாலும், வரவு செலவு கணக்குகளை எழுத சொல்லி வார்டன் திட்டியதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக விடுதி வார்டன் சகாயமேரி மீது, மாணவி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்பட யில், திருக்காட்டுப்பள்ளி போலீஸார் கைது செய்தனர். தற்போது அவர், ஜாமினில் வெளியே வந்துள்ளார்.
இதற்கிடையில் ஜனவரி 17 ஆம் தேதி, மாணவி சிகிச்சையில் இருந்தபோது, இந்து முன்னனி மாவட்ட செயலாளர் முத்துவேல் என்பவர் எடுத்த வீடியோவில், தன்னை மதம் மாற பள்ளி நிர்வாகத்தினர் வற்புறுத்தியதாக கூறிய வீடியோ வெளியானது. இந்த செல்போன் வீடியோ பதிவு டிஎஸ்பி பிருந்தா விடம், ஒப்படைக்கப்பட்டது. மேலும், பள்ளி நிர்வாகிகள் மதம் மாற வற்புறுத்தியதால் தான், தன் மகள் தற்கொலை செய்து கொண்டார் என, மாணவியின் தந்தை முருகானந தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தார்.
இதற்கிடையில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி அன்று, தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் இரண்டரை மணி நேரம் பள்ளி மாணவியின் பெற்றோர் வாக்குமூலம் அளித்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 31ஆம் தேதி பள்ளி மாணவி லாவன்யா தற்கொலை தொடர்பாக சுமார் மூன்றரை மணி நேரம் 20 பேரிடம் விசாரணை செய்த தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், போலீசார், மருத்துவர்கள், பள்ளிக்கு ஆதரவானவர்கள், மாணவியின் தாத்தா, பாட்டி உள்ளிட்டோரிடம் விசாரணை செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மாணவி தற்கொலை வழக்கை, சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி, சென்னை சிபிஐ அதிகாரிகள், மாணவி தற்கொலை விவகாரத்தில், 18 வயதுக்கு கீழ் உள்ளவரை தற்கொலைக்கு துாண்டுதல் உட்பட நான்கு சட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, சிபிஐ இணை இயக்குநர் வித்யா குல்கர்னி தலைமையில், கண்காணிப்பாளர் நிர்மலாதேவி, டிஎஸ்பிக்கள் ரவி, சந்தோஷ் மற்றும் மத்திய தடயவியல் நிபுணர்கள் என 14 பேர் கொண்ட குழுவினர், 21 ஆம் தேதி மதியம் 12.20 மணிக்கு மாணவி படித்த பள்ளி மற்றும் விடுதிக்கு வந்தனர். அங்கு முதலில் திசைக்காட்டும் கருவியை கொண்டு அதன்படி பள்ளி விடுதி, கன்னியாஸ்திரிகள் தங்கும் கட்டிடங்கள், வகுப்பறை,மற்றும் மாணவி தங்கியிருந்த அறை, ஆசிரியர்கள் தங்கும் அறை, கன்னியாஸ்திரிகள் தங்கும் அறை என அனைத்து பகுதிகளையும் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து ஆய்வு செய்தனர். அதே போல் பள்ளி நிர்வாகத்தில் உள்ளவர்களிடமும் விசாரணையை நடத்தி அதனை பதிவு செய்து கொண்டனர்.
இந்நிலையில் காலை 12.20 மணிக்கு தொடங்கிய விசாரணையில் சிபிஐ இணை இயக்குநர் வித்யா குல்கர்னி, கண்காணிப்பாளர் நிர்மலாதேவி ஆகியோர் 3.20 மணிக்கு புறப்பட்டு திருக்காட்டுப்பள்ளி பயணியர் தங்கும் விடுதிக்கு சென்றனர். இதனை தொடர்ந்து மத்திய தடயவியல் நிபுணர் குழுவினர்கள் மாலை 5.50 வரை விசாரணை செய்து விட்டு புறப்பட்டு சென்றனர், அப்போது அதிகாரிகளிடம் கேட்ட போது, இன்றுடன் இப்பள்ளியில் விசாரணை முடிந்தது. மாணவிகளிடம் விசாரணை செய்ய வில்லை என கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
இது குறித்து மாணவியின் தோழி கூறுகையில், என்னிடம் அம்மாணவியை பற்றி கேட்டனர். பள்ளி நிர்வாகிகள், மதம் மாற கூறினார்களா என்று கேட்டனர். அதற்கு நான் இல்லை என்றேன். நாங்கள் கடந்த ஜன. 9 ஆம் தேதி ஒன்றாக தங்கியிருந்த போது, அவருக்கு வயிற்று வலி வந்தது. உடனே, பள்ளி நிர்வாகிகள், அவரை மருத்துவரிடம் அழைத்து சென்று சிகிச்சையளித்தனர். அந்த மாணவி, யாருடனும் அதிகமாக பேசமாட்டார். இங்கேயே தான் இருப்பார் என்று கூறினேன். இது போல் சுமார் அரை மணி நேரம் என்னிடம் விசாரணை செய்தார்கள். பின்னர் சிலமாணவிகளிடமும் விசாரணை செய்தனர். மாணவி, தற்கொலை பிரச்சனையை தொடர்ந்து விடுதி மூடப்பட்டதால், தினந்தோறும் வடுகம்பாளையத்திலிருந்து சுமார் 3 மணி நேரம் பஸ்சில் சென்று வருகின்றோம். நாங்கள் பிளஸ் 2 படிப்பதால், எங்களது படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் விடுதியை திறக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.
இதனை தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி பயணியர் விடுதியில், விடுதியில் வார்டனாக பணிக்கு சேர்ந்த 2 மாதங்களே ஆன காயத்திரி என்பவரிடமும், மாணவி வயிற்று வலியால் துடித்தபோது, அவருக்கு முதலுவதி சிகிச்சை அளித்த ஒய்வு பெற்ற அரசு செவிலியர் ஜெசிந்தா என்பவரிடம் விசாரணை நடைபெற்றது. இது குறித்து பள்ளி நிர்வாகிகள் கூறுகையில், எங்களை ஒன்றும் பேசக்கூடாது என்று கூறியுள்ளார்கள் என கூறி கதவினை தாழிட்டுக்கொண்டனர்.