(Source: ECI/ABP News/ABP Majha)
Lok Sabha Qualification: தேர்தலில் யார் வாக்களிக்க முடியாது; யார் போட்டியிட முடியாது தெரியுமா?
Lok Sabha Qualification: மக்களவை தேர்தலில் யார் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் மற்றும் யார் போட்டியிட தகுதியுள்ளவர்கள் என்று இந்திய தேர்தல் ஆணையம் விதிகள் வகுத்துள்ளது.
நாடாளுமன்றத்தின் 18வது மக்களவை தேர்தலானது ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும், இந்த தேர்தலானது, நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாக்காளர்களுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும், என்ன தகுதி இருக்க கூடாது என்று தெரிந்து கொள்வோம்.
வாக்காளர்களுக்கான தகுதி:
வாக்களிப்பவர்கள் வாக்களிக்கும் வயதானது, குறைந்தது 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். மேலும் 18 வயது நிரம்பியிருந்தாலும், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
இந்திய நாட்டின் குடிமக்கள் மட்டுமே வாக்களிக்க முடியும் என்பதால், இந்திய குடியுரிமையை துறந்தவர்கள் வாக்களிக்க முடியாது.
மனநலம் குன்றியவர்கள் என சான்றளிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க முடியாது.
வேட்பாளர்களுக்கான தகுதி:
மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறைந்தது 25 வயது நிரம்பியிருக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் சரத்து 84 தெரிவிக்கிறது.
நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு குறைந்தது 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் போட்டியிட தகுதியற்றவர்களாக கருதப்படுகிறார்கள்.
மேலும், நீதிமன்றத்தால் தேர்தலில் போட்டியிட கூடாது என தடை விதிக்கப்பட்டிருந்தாலும் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்
சுவாரஸ்யமான தகவல்கள்:
டெல்லியில் வசித்து வருபவராக இருந்தாலும், டெல்லியில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் வாக்காளராக இருந்தாலும், நீங்கள் இந்தியாவில் உள்ள எந்த தொகுதியிலும் வேண்டுமானாலும் போட்டியிடலாம். ஆனால், அசாம், லட்சத்தீவு மற்றும் சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் தவிர என்பது குறிப்பிடத்தக்கது.
ஏதேனும் குற்றத்திற்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, 2 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை பெற்றால் தேர்தலில் போட்டியிட முடியாது. ஒரு நபர், 2 தொகுதிகளில் போட்டியிடலாம். வெற்றி பெற்றால், ஏதேனும் ஒரு தொகுதியில் மட்டுமே பிரதிநிதியாக இருக்க வேண்டும். ஆகையால் ஒரு தொகுதியை ராஜினா செய்துவிட வேண்டும். ஆனால் ஒரே கட்சியை சேர்ந்த 2 பேர் ஒரு தொகுதிகளில் போட்டியிட முடியாது.
வேட்பாளருக்கு வாக்களிக்க பணம் அளிப்பதும் மட்டுமல்ல, பணம் பெற்றுக்கொள்வதும் குற்றமாகும் . இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால் ஒருவருடம் வரை சிறை விதிக்கப்படலாம் அல்லது அபராதம் விதிக்கப்படலாம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
தேர்தல் செலவுக்கான வரம்பானது, பெரிய மாநிலங்களான உ.பி., பீகார், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற பெரிய மாநிலங்களில் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பாளரின் செலவு வரம்பு பெரிய மாநிலங்களுக்கு ரூ.95 லட்சமும், சிறிய மாநிலங்களுக்கு ரூ.75 லட்சமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வாக்களிப்பதற்காக மது வாங்கி அருந்தினாலும் லஞ்சம் வாங்கியதற்கு சமமாகும்.