கரூர் பாஜக வேட்பாளர் டிராக்டர் ஓட்டி விவசாயிகளிடம் வாக்கு சேகரிப்பு
கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.கண்ணிமேய்க்கிபட்டி விவசாய நிலத்தில் டிராக்டர் ஓட்டி விவசாயிகளிடம் தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
கரூர் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் டிராக்டர் ஓட்டி விவசாயிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, கடுமையான வறட்சியில் உள்ள வேடசந்தூர் தொகுதியில் குடிநீர் தேவை மட்டுமின்றி, விவசாயம் செழிக்கவும் பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டி, உல்லியக்கோட்டை, R.புதுக்கோட்டை, கண்ணிமேய்க்கிபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். குறிப்பாக கண்ணிமேய்க்கிபட்டி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் டிராக்டர் ஓட்டி விவசாயிகளிடம் தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
குறிப்பாக புதூர் பகுதி மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளர் செந்தில்நாதன், அங்கிருந்து இரு சக்கர வாகனத்தின் மூலம் கிராமப் பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
மேலும், அங்குள்ள மிளகாய் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்களை சந்தித்து, பாஜக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த அம்சங்கள் அடங்கிய துண்டறிக்கைகளை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கண்ணிமேய்க்கிபட்டி கிராம பொதுமக்களிடம் பேசிய அவர், ஒரு காலத்தில் விவசாயம் செழித்து இருந்த வேடசந்தூர் தொகுதி, தற்போது கடுமையான வறட்சியில் உள்ளது.
தாமரை சின்னத்திற்கு ஆதரவளித்து எனக்கு நீங்கள் ஒரு வாய்ப்பு அளித்தால், வேடசந்தூர் தொகுதியின் குடிநீர் பற்றாக்குறையை போக்குவதோடு, விவசாயம் செழிக்க தண்ணீர் கொண்டு வர பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்தார். மேலும், கடுமையான வறச்சியிலும் கூட குறைந்த அளவு தண்ணீரை பயன்படுத்தி, நம்பிக்கையோடு பயிர் செய்யும் விவசாயிகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.