TVK Symbol: விஜய்க்கு விசில் சின்னம்.. டிவிகே-விற்கு விசில் போடுவார்களா மக்கள்?
முதன்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தவெக-விற்கு விசில் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களுக்குள் நடைபெற உள்ள நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கட்சி தமிழக வெற்றிக் கழகம்.
விசில் சின்னம்:
திமுக-வின் உதயசூரியன் சின்னம், அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்திற்கு போட்டியாக இந்த தேர்தலில் களமிறங்கும் தவெக எந்த சின்னத்தில் போட்டியிட உள்ளது? என்ற எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. இந்த நிலையில், தேர்தல் ஆணையம் தவெக-விற்கு விசில் சின்னத்தை ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது. இதனால், தவெக தொண்டர்களும், ரசிகர்களும் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக களமிறங்கும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு விசில் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று அக்கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். தவெக அனுப்பிய 10 சின்னங்கள் அடங்கிய பட்டியலில் விசில் சின்னம் முதன்மையானதாக இருந்ததாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் தேதி அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசில் சின்னம் இன்று தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சின்னத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியில் தவெக-வினரை தீவிரமாக செயல்பட தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சின்னம்தான் ஆறுதல்:
திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் தங்கள் கூட்டணியை வலுப்படுத்தியுள்ள நிலையில், தவெக-வுடன் கூட்டணி வைக்க எந்த கட்சியும் இதுவரை ஆர்வம் காட்டவில்லை. திமுக மற்றும் அதிமுக வலுவான கூட்டணியை எதிர்த்து, தனியாக களமிறங்கும் நிலையிலே தற்போது வரை தவெக உள்ளது.
கரூர் சம்பவம், ஜனநாயகன் நெருக்கடி என பல்வேறு நெருக்கடிக்கு ஆளாகியிருக்கும் தவெக-விற்கு தற்போது இந்த விசில் சின்னம் மட்டுமே மிகப்பெரிய ஆறுதலாக உள்ளது.
குஷியில் தவெக:
இந்த சின்னம் கிடைத்தது தவெக-விற்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவரான விஜய் நடித்த பிகில் மற்றும் தி கோட் படங்களில் அவர் விசிலுடன் நடித்திருப்பார். இது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். மேலும் விசில் சின்னம் கிடைத்தால் அதை மக்களிடம் கொண்டு செல்வது மிகவும் எளிது என்றும் தவெக-வினர் கருதுகின்றனர்.
இணையத்தில் தற்போது முதலே விசில் சின்னம் பேசுபொருளாக மாறியுள்ளது. உதயசூரியன் - இரட்டை இலைக்கு சவால் அளிக்கும் வகையில் இந்த சின்னம் இருக்கும் என்று கருதப்படுகிறது. மேலும், விஜய்யின் தி கோட் படத்தில் விசில் போடு என்ற பாடலும் இடம்பெற்றிருக்கும்.





















