’ஒரு ரூபாய் கூட இலஞ்சம் வாங்கமாட்டேன்’ - உறுதிமொழி பத்திரம் கொடுத்து வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்
”இதன் மூலம் நான் உறுதியளிப்பது என்னவென்றால், நான் என் கடமையைச் செய்ய ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெற மாட்டேன் என உறுதி மொழி பத்திரம் மூலம் உறுதி அளிக்கிறேன்”
வருகின்ற 19ம் தேதி நடைபெறும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் உள்ள 811 பதவிகளுக்கான தேர்தல் நடைபெற இருந்தது. 9 பேரூராட்சி உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 802 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 3352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில், 778 பேர் போட்டிடுகின்றனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் சமூக வலைதளங்களிலும், வீடு வீடாக சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக, அதிமுகவினர் இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், இரண்டு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன முறைகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.எஸ்.புரம் பகுதியில் 71 வார்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கிறிஸ்டிபன் பிரவீன் குமார் போட்டியிடுகிறார். தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் இவர், இலஞ்சம் வாங்கமாட்டேன் என்ற உறுதிமொழி பத்திரத்தை வாக்களார்களுக்கு கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார். 20 ரூபாய் பாண்ட் பேப்பரில், ”கோவை மாநகாராட்சியில் 71 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறேன். இதன் மூலம் நான் உறுதியளிப்பது என்னவென்றால், நான் என் கடமையைச் செய்ய ஒரு ரூபாய் கூட லஞ்சம் பெற மாட்டேன் என உறுதி மொழி பத்திரம் மூலம் உறுதி அளிக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை ஜெராக்ஸ் எடுத்து மக்களிடம் கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வது வார்டில் திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி, வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் கோவை பீளமேடு புதூரில் வாக்கு சேகரிப்பின் போது, பொதுமக்களுடன் இணைந்து கும்மி அடித்தும், நடனம் ஆடியும் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். துண்டு பிரச்சுரங்களை வழங்கி அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன் என வாக்குறுதி அளித்து, உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வருகிறார்.
கோவை மாவட்டம் பேரூர் பேருராட்சியில் 7 வது வார்டில் தி.மு.க. சார்பாக ராதாகிருஷ்ணன் என்பவர் போட்டியிடுகிறார். இவர் அந்த பகுதி மக்களிடையே விநோத முறையில், வாக்கு சேகரித்து வருகிறார். பாரம்பரிய முறைப்படி, சுப நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுப்பது போன்று, தாம்பூல தட்டில் வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமம் வைத்து வீடு வீடாக சென்று ராதாகிருஷ்ணன் வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் தமிழகத்தில் பிரபலமான பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே எனது வார்டு இருப்பதால் தமிழ் பாரம்பரிய முறைப்படி வாக்கு சேகரிப்பதாக அவர் தெரிவித்தார்.