Exclusive: கோவையில் அண்ணாமலையால் உறுதியாக வெற்றி பெற முடியாது - சிங்கை ராமச்சந்திரன்
திமுக ஒரு பலவீனமான வேட்பாளரை போட்டு பாஜகவிற்கு சாதகமாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கும் உள்ளது. கரூர்காரர் உள்ளே இருந்து கொண்டு, கரூர்காரரை ஜெயிக்க வைக்க நடத்தப்படும் நாடகம் போல இருக்கிறது.
கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் கோவை, பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுக வேட்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் கோவை தொகுதி அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் ஏபிபி நாடுவிற்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், “பத்து ஆண்டுகள் பாஜக ஆட்சி இருந்தது. ஹைதராபாத், மும்பை, பெங்களூரு போல கோவையை மேம்படுத்த என்ன செய்துள்ளார்கள்? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், கோவை நகரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் பாஜக எதுவும் செய்யவில்லை. மோடி இருந்தாரே தவிர, கோவை நகருக்கு எந்தவொரு பிரயோஜனமும் இல்லை. ஊருக்கு சம்மந்தம் இல்லாத அண்ணாமலையை கரூரில் இருந்து கொண்டு வந்து நிறுத்துகிறார்கள். கரூர் கிளைமட் வேறு, எங்க ஊர் கிளைமட் வேறு. கரூர் தண்ணீர் வேறு, எங்க ஊர் தண்ணீர் வேறு. கரூர் மக்களும் நல்லவர்கள் தான். நாங்களும் நல்லவர்கள் தான். ஆனால் மண்ணின் மைந்தனாக நான் இங்கே நிற்கிறேன்.
கோவை எனது கனவு. அண்ணாமலை கரூருக்கு சென்று நிற்கட்டும். பெரிய ஆளாகட்டும். அண்ணாமலை தனக்கு பெரியதாக விருப்பம் இல்லாமல், சொன்னதால் தான் வந்து நிற்கிறேன் என்கிறார். விருப்பம் இல்லாமல் ஏன் நிற்க வேண்டும்? நாங்கள் விருப்பத்தோடு நிற்கிறோம். கோவை மக்கள் கோயம்புத்தூர்காரனுக்கு தான் ஆதரவு தருவார்கள். திமுக ஒரு பலவீனமான வேட்பாளரை போட்டு பாஜகவிற்கு சாதகமாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கும் உள்ளது. கரூர்காரர் உள்ளே இருந்து கொண்டு, கரூர்காரரை ஜெயிக்க வைக்க நடத்தப்படும் நாடகம் போல இருக்கிறது என சமூகவலைதளங்களில் வருவது உண்மையா எனத் தெரியவில்லை. ஆனால் நாங்கள் உறுதியாக ஜெயிப்போம். எஸ்.பி. வேலுமணி தான் இங்கு வேட்பாளர் போல உள்ளார்.
அதிமுக தொண்டர்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் பேசிக்கொண்டிருக்கும் அண்ணாமலை கோவையில் வந்து நின்றால், உறுதியாக அவரால் வெற்றி பெற முடியாது. அண்ணாமலை இங்கு வந்தது தவறு. பாஜகவிடம் வலுவான கூட்டணி இல்லை. கட்சி வளர்ந்தது எனச் சொல்பவர்கள் பத்து பேருக்கு திரும்பத் திரும்பத் வாய்ப்பு தருகிறார்கள். எங்களை போல சாதாரண ஆட்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. ஒரு பக்கம் ஒருவர் கவர்னர் பதவியை ராஜினாமா செய்து வருகிறார். இன்னொரு பக்கம் எம்.எல்.ஏ.வாக உள்ளவர் எம்.பிக்கு நிற்கிறார். பாஜகவில் வேட்பாளருக்கு ஆள் இல்லை கட்சி வளர்ந்தது என்றால் 40 தொகுதிகளிலும் போட்டி போடுங்கள் எங்களுடன் ஏன் போட்டி போடுகிறீர்கள்? உங்கள் கட்சியை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள். எங்கள் பலம் என்ன எனத் தெரியும் அது தேர்தல் முடிவு வரும் போது தெரியும்” எனத் தெரிவித்தார்.