TNPSC OTR Registration: ஒருமுறை நிரந்தரப் பதிவுடன் ஆதாரை இணைக்கக் கால அவகாசம் நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி
ஒருமுறை நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒருமுறை நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்துத் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் கிரண் குராலா இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’ஒருமுறை நிரந்தரப் பதிவு (OTR) கணக்கு வைத்திருக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும், அவர்களது ஆதார் எண்ணை 28.02.2022 ஆம் தேதிக்குள், ஒருமுறை நிரந்தரப் பதிவுடன் தவறாமல் இணைக்க வேண்டும் என்றும், அதனடிப்படையில், எதிர்காலத்தில் தேர்வாணையத்தால் வெளியிடப்படும் அறிவிக்கைகளுக்கு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் 2ஏ தேர்விற்கான அறிவிக்கை 23.02.2022 அன்று தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டது. இத்தேர்விற்கு, இணைய வழியில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் 23.03.2022 ஆகும். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது ஒருமுறை நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாகும்.
அவ்வாறு, ஒருமுறை நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, 01.02.2022 நாளிட்ட செய்தி வெளியீட்டின்படி, கடைசி நாள் 28.02.2022 ஆகும். ஆகையால், 28.02.2022க்குள் ஆகார் எண்ணை ஒருமுறை நிரந்தரப் பதிவுடன் இணைக்காதவர்கள், குரூப் 2 மற்றும் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்படும்.
இதனைத் தொடர்ந்து, தற்போதுவரை ஒருமுறை நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைக்காத மற்றும் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெருவாரியான தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், தேர்வர்களின் நலன் கருதி, ஒருமுறை நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 30.04.2022 வரை தேர்வாணையத்தால் நீட்டிக்கப்படுகிறது.
அதேவேளையில், ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் 23.03.2022 என்பதால், அத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தவறாமல் 23.03.2022க்குள், ஒருமுறை நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைத்து, அதன்பின், ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் 2ஏ தேர்விற்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், ஒருமுறை நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை ஒருமுறை இணைத்தால் போதுமானது என்பதால், ஏற்கனவே தங்களது ஆதார் எண்ணை இணைத்த விண்ணப்பதாரர்கள் மீண்டும் இணைக்கத் தேவையில்லையென இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது’’.
இவ்வாறு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்