நிதி நெருக்கடி, நிர்வாக மோசடி: தத்தளிக்கும் பல்கலைக்கழகங்கள், தவிக்கும் ஆசிரியர்கள்- விடிவு எப்போது?
நிதி நெருக்கடி, நிர்வாக மோசடிகளால் தமிழ்நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் தத்தளிக்கும் நிலையில், ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர். ஏன் இப்படி? என்னதான் தீர்வு? காணலாம்.
18 வயது முதல் 23 வயது வரையிலான உயர் கல்வி மாணவர் (Gross Enrolment Ratio) சேர்க்கையில் இந்திய சராசரி 28.4 சதவீதமாக இருக்கும் நிலையில், தமிழகத்தின் சராசரி 46.9 ஆக இருக்கிறது. இந்தப் பெருமைக்குக் காரணமாகத் திகழ்பவைகளில் முக்கியமானவை மாநிலப் பல்கலைக்கழகங்கள். தமிழகம் முழுவதும் வெவ்வேறு நகரங்களில் தலைவர்களின் பெயரைத் தாங்கி பல்வேறு பல்கலைக்கழகங்கள் பீடுநடை போட்டு வருகின்றன.
இந்த நிலையில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சென்னைப் பல்கலைக்கழகமும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல சேலம் பெரியார் பல்கலைக்கழகமும் நிர்வாக நெருக்கடியால் பேசுபொருளாகி உள்ளது. அதற்கு முன்னால் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரே கைது செய்யப்பட்ட அவலமும் நிகழ்ந்தது. அதேபோல திருச்சி பாரதிதாசன் பல்கலை.யிலும் தற்போது பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
காமராஜர் பல்கலைக்கழகத்தில் என்ன பிரச்சினை?
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (Madurai Kamaraj University) ஆசிரியர்களின் ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றுக்காக மாதத்துக்கு சுமார் ரூ.12 கோடி தேவைப்படுகிறது. இது ஆண்டுக்கு சுமார் 145 கோடி ரூபாய் ஆகும். இவை தவிர்த்து பல்கலைக்கழக வளாகத்தை நிர்வகிக்க தனியாக நிதி தேவைப்படுகிறது. ஆனால் தமிழக அரசு 58 கோடி ரூபாயை மட்டுமே கொடுக்கிறது.
இதனால் ஆண்டுதோறும் கூடுதல் நிதி பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது. இந்த சூழலில், பல்கலைக்கழக வைப்பு நிதியில் இருந்து சுமார் ரூ.300 கோடி வரை எடுத்து செலவு செய்யப்பட்டது. வைப்பு நிதி காலியான நிலையில், தற்போது கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கூடுதல் நிதி பெறுவதில் தணிக்கைத் துறை மீதான தடை நிலுவையில் உள்ளது. இதனால் பல்கலைக்கழகம் இயங்குவதிலேயே சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஊதியமே வழங்க முடியாத அவலம்
பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கவில்லை. குறிப்பாக டிசம்பர், ஜனவரி ஆகிய 2 மாதங்களில் இதுவரை ஊதியம் வழங்கவில்லை. பிப்ரவரி மாத ஊதியத்தை வழங்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழக ஆசிரியர்களும் ஊழியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தத்தளிக்கும் சென்னைப் பல்கலைக்கழகம்
பல்வேறு குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய பெருமைக்குச் சொந்தமானது சென்னைப் பல்கலைக்கழகம் (University of Madras). இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான இது 1851-ல் சென்னையில் தொடங்கப்பட்டது. லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம், 1857-ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்துத் துறைகளும் இருந்தன. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது. தணிக்கைத் துறை தடை காரணமாக தமிழக அரசு வழங்கும் நிதி படிப்படியாகக் குறைக்கப்பட்டது. பல்வேறுகட்ட எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகளை வருமானவரித் துறை அண்மையில் முடக்கியது. ஊதியம், ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் நீடிக்கும் நிலையில், விடுதிகளில் மாணவர்களுக்கு உணவு வழங்கக் கூடத் தடுமாறும் நிலை உருவாகியுள்ளது. பல்கலைக்கழகம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட அளவை செலுத்தினால் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க தயாராக இருப்பதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. எனினும் பிரச்சினை இதுவரை தீர்ந்தபாடில்லை.
திருச்சி, சேலம் பல்கலைக்கழகங்களில் என்ன நடக்கிறது?
அதேபோல திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் (Bharathidasan University, Tiruchirappalli) நிதிப் பற்றாக்குறையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கிய 10 உறுப்புக் கல்லூரிகளும் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டதால், நிதி இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகம் (Periyar University, Salem) ஏற்கெனவே நிர்வாகச் சிக்கல்களில் தவிக்கும் நிலையில், நிதி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த இரு பல்கலைக்கழகங்களிலும் ஊதியம் தர முடியாத அளவுக்கு பிரச்சினை ஏற்படவில்லை. அரசு தலையிட்டு முறைப்படுத்தாவிட்டால் இங்கும் ஊதியப் பிரச்சினை வெடிக்கும் என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அரசு கூறுவது என்ன?
எனினும் இதுகுறித்து அரசுத் தரப்பில் கூறும்போது, ’’பல்கலைக்கழகங்களில் குறிப்பிட்ட தேவைகளுக்காக ஒதுக்கப்படும் நிதிகள், அதற்காக மட்டும் செலவிடப்படுவதில்லை. நிதிக் குழு, சிண்டிகேட் குழுவிடம் எந்த அனுமதியும் பெறாமலும் தகவல் தெரிவிக்காமலும் நிர்வாகங்கள் வெவ்வேறு செலவுகளுக்குப் பயன்படுத்துகின்றன. இதனால் நிர்வாகத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கின்றனர்.
பல்கலைக்கழக நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாததுதான் பிரச்சினைக்குக் காரணம் என்கிறார் பிரபல கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி. இதுகுறித்து அவர் கூறும்போது, பல்கலைக்கழகங்களின் நிதி மேலாண்மைத் திட்டம் ஒழுங்காக இல்லை. என்ன வரவு, என்ன செலவு என்ற ஓர் ஆசிரியரின் கல்வித் தகுதி, பாடத்திட்டம் வெளிப்படையாக இணையதளத்தில் பதிவிடும்போது, பல்கலைக்கழகத்தில் என்ன வருமானம், எவ்வளவு செலவாகிறது என்றும் வெளியிட வேண்டும்.
யுஜிசி சார்பில் ஆராய்ச்சி, மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. அதை பல்கலைக்கழகங்கள் முறையாகப் பயன்படுத்தினாலே ஏராளமான நிதி கிடைக்கும். இது ஒப்பீட்டளவில் தமிழகத்தில் குறைவாகவே இருக்கிறது.
கற்பித்தல் தரம் பாதிக்கப்படும்
வேலை செய்யும் நிபுணர்களை கற்பித்தல் பணிக்கு நியமிக்கலாம் என்று ஏஐசிடிஇ சொல்கிறது. ஆனால் பல்கலைக்கழகங்களிலேயே ஊதியப் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் பல்கலை.களில் அரசுப் பணியில் இருக்கும் ஆசிரியர்களே வேலையைத் துறந்து, வேறு நிறுவனங்களுக்குச் செல்ல யோசிக்கும் நிலை உருவாகும். இதனால் கற்பித்தல் தரம் பாதிக்கப்படும்.
என்ன செய்ய வேண்டும்?
நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை உருவாக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் இருக்கும் நிதிக் குழு, அங்குள்ள சிண்டிகேட், செனட் உறுப்பினர்களின் கூட்டத்தில் பேசி ஒவ்வொன்றையும் பேச வேண்டும் என்கிறார் கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.
அரசு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு, ’’தற்காலிகமாக பல்கலைக்கழகங்களுக்கு வட்டியில்லாக் கடன்போல ஒரு தொகையை அரசே அளிக்க வேண்டும். அதை பல்கலை.கள் உரிய முறையில் பிறகு திருப்பி அளிக்க வேண்டும்’’ என்று கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார்.
இந்த நிலையில், அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு பல்கலைக்கழகங்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.