’வெற்று அறிவிப்பு, இனியும் ஏமாற மாட்டோம்’- தமிழக அரசுக்கு ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை- நடந்தது என்ன?
பழைய பென்சன் திட்டத்தை உடனே அமல்படுத்தக் கோருகிறோம் என்று தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தேர்தல் நெருங்கும் போதெல்லாம் குழு அமைக்கும் அறிவிப்பை பார்த்து இனிமேலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏமாற மாட்டார்கள் என்று தேசிய ஆசிரியர் சங்கம் விமர்சித்து உள்ளது.
இதுகுறித்து மேலும் அவர்கள் கூறி உள்ளதாவது:
''தேசிய ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் தொடர் போராட்டத்திற்குப் பின் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாழ்வாதார பிரச்சனையான பென்ஷன் திட்டம் பற்றி தமிழக நிதியமைச்சர் சட்டப் பேரவையில் மௌனம் கலைந்து சில வார்த்தைகள் கூறியுள்ளார். அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஆனால் இந்த அரசு தங்களது தேர்தல் வாக்குறுதி எண் 305-ல் பழைய பென்சன் திட்டம் கொண்டு வருவோம் என அறிவித்திருந்தது.
ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த தொகை எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது?
ஆனால் தற்போது மத்திய அரசு அறிமுகப் படுத்தியுள்ள ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டத்தை (UPS) பரிசீலிப்பதாக அறிவித்திருப்பது ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழக அரசு ஆசிரியர்களிடம் CPS திட்டத்தில் பிடித்தம் செய்த தொகையை மத்திய அரசின் PFRDA நிதியில் செலுத்தவில்லை. PFRDA-ல் நிதியை செலுத்திய மாநிலங்களுக்குத்தான் மத்திய அரசின் UPS திட்டம் பொருத்தமானது. எனவே ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த தொகை எங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதனை எப்படி மத்திய அரசின் திட்டத்தில் இணைக்கப்போகிறது என்பதை நிதியமைச்சர் தெளிவு படுத்த வேண்டும்.
இனிமேலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏமாறமாட்டார்கள்
அதை விடுத்து தேர்தல் நெருங்கும் போதெல்லாம் குழு அமைக்கும் அறிவிப்பை பார்த்து இனிமேலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஏமாற மாட்டார்கள். எனவே. இந்த அரசு உண்மையிலேயே ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது அக்கறையுள்ள அரசு என்பதை நிரூபிக்க சங்கங்களை அழைத்து எந்தப் பென்ஷன் திட்டத்தை? எப்போது? எப்படி? அமல் படுத்தப் போகிறது என்ற அரசின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தவேண்டும். இல்லையேல் இது வெற்று அறிவிப்பாகவே பார்க்கப்படும்.
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பது பழைய ஓய்வூதியத் திட்டமே தவிர குழு அமைப்பது அல்ல என்பதால் சொன்னதைச்செய்யும் அரசு எனக்கூறிக்கொள்ளும் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டுகிறோம்.
இவ்வாறு தேசிய ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

