தஞ்சாவூர், திருச்சி மாவட்டத்தில் பள்ளி கூடுதல் கட்டிடங்கள் திறப்பு விழா! மாணவர்களின் கல்விக்கு ஒரு புதிய பாதை
தஞ்சாவூர், திருச்சி மாவட்டத்தில் பள்ளி கூடுதல் கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து அந்ததந்த பள்ளிகளில் நடந்த விழாக்களில் வகுப்பறை கட்டிடங்கள் மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ஆதிந.2) துறை மூலம் நபார்டு வங்கி திட்ட நிதி உதவியுடன் ரூ.49.00 இலட்சம் மதிப்பீட்டில் தஞ்சாவூர் அருகே மானோஜிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இரண்டு வகுப்பறை கட்ட கட்டுமானப் பணியினை மேற்கொள்ள ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த கட்டுமானப் பணிகள் நிறைவுற்று மாணவர்கள் பயன்பாட்டிற்கு தயார் ஆனது. இதையடுத்து சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக இந்த கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதேபோல் அகரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.55.00 லட்சம் மதிப்பில் புதியஆய்வக் கட்டிடமும் காணொலி வாயிலாக திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து மானோஜிப்பட்டி ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.
தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைஅலுவலர் ரவிச்சந்திரன், தாட்கோ உதவிபொறியாளர் கிருத்திகா, வட்டாட்சியர்திருசிவகுமார், மானோஜிப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் சந்திர மௌலி, அகரப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் புதிய வகுப்பறைகள் மாணவர்களை பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் 2024–25ம் ஆண்டு நிதியாண்டின் கீழ் ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகளில் கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் கட்டிடங்களை காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அந்தவகையில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்சி மாநகராட்சி காட்டூர் ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட சோழமாதேவி ஊராட்சியில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளிகளில் 6 வகுப்பறைகள், 2 கணினி ஆய்வகம், 1 அறிவியல் ஆய்வகம் , பொருட்கள் பாதுகாப்பு அறை 1 என மொத்தம் ரூ.2 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொடர்ந்து அந்த கட்டிடங்களை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி மண்டல குழு தலைவர் மு.மதிவாணன், திருச்சி மாவட்ட செயற்பொறியாளர் தாட்கோ நவநீதகிருஷ்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சிவா, திருவெறும்பூர் வட்டாட்சியர் தனலெட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்த் மற்றும் அண்ணாதுரை, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன், பகுதி செயலாளர் நீலமேகம், மாமன்ற உறுப்பினர் தாஜுதீன், காட்டூர் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தேன்மொழி மற்றும் சோழமாதேவி ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வசந்தகுமாரி ஆகியோர் உடனிருந்தனர். புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் கல்வித்திறன் இன்னும் மேம்படும். நல்ல சூழ்நிலையில் பாடங்களை படித்து முன்னேற்றம் பெறுவர் என்று பொதுமக்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.





















