Teachers Protest: 'முதல்வர் ஸ்டாலினுக்கு 2026-ல் பாடம் புகட்டுவோம்'- ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சூளுரை!- பின்னணி இதுதான்!
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக அரசு அமல்படுத்தவில்லை என்று ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடையே எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், அரசுக்குப் பாடம் புகட்டுவோம் என சூளுரைத்துள்ளனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இயக்ககங்களின் ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் (நவம்பர் 8ஆம் தேதி) நடைபெற்றது. மாவட்டம்தோறும் துறை வாரியாக ஆய்வுக் கூட்டத்தை நடத்த உள்ளதாக அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அந்த வகையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதனை முன்னிட்டு துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் பள்ளிக் கல்வி இயக்ககங்களின் இயக்குநர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நவம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அறிவிக்கப்படவுள்ள புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்து இருந்தார்.
நிதி சாராத கோரிக்கைகளை மட்டும் ஆய்வு
முதல்வர் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உள்ள நிதி சிக்கல்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில் ஆசிரியர்களின் நிதி சாராத கோரிக்கைகளை மட்டும் ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் 309ஆம் வாக்குறுதியாக, ‘புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்’ என்று கூறப்பட்டிருந்தது. எனினும் இதுவரை இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் இப்போதைக்கு அறிவிக்கப்படாது என்றே தெரிகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக முதலமைச்சர் 2021-ல் சட்டமன்றத் தேர்தலின்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என வாக்குறுதி அளித்தார். ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளாகியும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. உண்மையிலேயே நிதி நிலை மோசமாக உள்ளது என்றால், நிதி நிலை சரியாகும் வரை எங்ளுக்கு ஊதியம் வேண்டாம் என்று தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பார்களா?
எதிர்க்கட்சித் தலைவர் பரிசு வேண்டுமா?
எதிர்க்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதலமைச்சர் சந்தித்துப் பேசுவார் என்றால், 2026 தேர்தலில் அதை அவருக்கு பரிசளிக்க தயாராக இருக்கிறோம் என்பதை சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்று அரசு ஊழியர்கள் சங்கத்தினர் குமுறி உள்ளனர்.
இதற்கிடையே 2026 தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் திமுக அரசுக்கு சரியான பாடம் புகட்டுவார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘’தங்களின் வாழ்நாள் முழுவதும் திமுகவை ஆதரித்து வந்த அரசு ஊழியர்களுக்கு இதை விடக் கொடுமையான துரோகத்தை எவராலும் செய்ய முடியாது.
திமுக அரசுக்குப் பாடம் புகட்டுவார்கள்
சிலரை சில முறை ஏமாற்றலாம், பலரை பலமுறை ஏமாற்றலாம். ஆனால், அனைவரையும் அனைத்து முறையும் ஏமாற்ற முடியாது. திமுகவிடம் தொடர்ந்து ஏமாறுவதற்கு ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் ஏமாளிகள் அல்ல. திமுக அரசின் தொழிலாளர் விரோத செயல்பாடுகளுக்கு பழிதீர்க்கும் வகையில் 2026 தேர்தலில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சரியான பாடம் புகட்டுவார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஆசிரியர் சங்கத்தினர் சிலர் ABP Nadu-விடம் பேசும்போது, ’’ஆட்சிக்கு வந்ததும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார். 4 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.
கைது அல்லது சமாதானம்
நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், ஒன்று கைது செய்கின்றனர். அல்லது அழைத்துப் பேசி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று சமாதானம் செய்கின்றனர். இதனால் 2026 பேரவைத் தேர்தலில் திமுகவுக்குப் பாடம் புகட்ட முடிவு செய்துள்ளோம்’’ என்று தெரிவித்தனர்.