மாற்றாந்தாய் மனப்பான்மை, பாகுபாடு.. அநீதி ஏன்? தமிழக அரசிடம் ஆசிரியர் கூட்டமைப்பு கேள்வி!
10 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட இருக்கும் ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் காட்டும் பாரபட்சமான மற்றும் மாற்றாந்தாய் மனப்பான்மையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணியின்போது ஒரு நாளைக்கு 24 தாள்களை மட்டும் திருத்துவதற்கு வழங்க வேண்டும் என்றும் விடைத்தாள் திருத்தம் செய்வதற்கான கட்டணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி உள்ளதாவது:
''10 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட இருக்கும் ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் காட்டும் பாரபட்சமான மற்றும் மாற்றாந்தாய் மனப்பான்மையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒவ்வொரு முதன்மை தேர்வாளரின் கீழ் ஆறு உதவி தேர்வாளர்கள் (AE) மற்றும் ஒவ்வொரு உதவி தேர்வாளருக்கும் ஒரு நாளைக்கு 24 விடைத் தாள்களுமே மதிப்பீடு செய்ய வழங்கப்படுகிறது. செய்முறை தேர்வு இல்லாத பாடங்களில் 90 மதிப்பெண்களுக்கும், செய்முறை தேர்வு உள்ள பாடங்களில் 70 மதிப்பெண்களுக்கும் மட்டுமே மதிப்பீடு செய்யப்படுகின்றன.
ஆனால் 10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஒவ்வொரு முதன்மைத் தேர்வாளருக்கு 10 உதவி தேர்வாளர்களும் ஒவ்வொரு உதவி தேர்வாளருக்கும் ஒரு நாளைக்கு 30 விடைத்தாள்களும் மதிப்பீடு செய்ய கொடுக்கப்படுகிற பாராபட்சமான ஒரு அநீதி கடைப்பிடிக்கப்படுகிறது.
அதிகமாக விடைத்தாள் மற்றும் குறைவான உழைப்பு
10ஆம் வகுப்பில் அறிவியல் பாடத்தில் 75 மதிப்பெண்களுக்கும், மற்ற பாடங்களில் 100 மதிப்பெண்களுக்கும் மதிப்பீடு செய்கிறோம். மேலும் 12ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிக்கு உழைப்பூதியமும் அதிகமாக வழங்கப்படுகிறது. முன்பு 12ஆம் வகுப்பு விடைத்தாள் மட்டுமே ஜெராக்ஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், சென்ற ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு விடைத்தாள்களுக்கும் ஜெராக்ஸ் வழங்கப்படுகிறது. இவ்வாறு இருக்க பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு மட்டும் அதிகமாக விடைத்தாள் மற்றும் குறைவான உழைப்பு ஊதியம் என்பது பாகுபாடு காட்டுவதாகவும், வருத்தம் அளிப்பதாகவும் உள்ளது.
எனவே 12 ம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு வழங்கப்படுவது போல் பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கும் ஒரு நாளைக்கு 24 விடைத்தாள் மட்டுமே வழங்கவும், சமமான உழைப்பூதியம் வழங்கவும், மேலும் ஒவ்வொரு முதன்மை தேர்வுவாளருக்கும் (CE) ஆறு உதவித் தேர்வாளர்கள் (AE) மட்டுமே இருக்கும் வகையில் மாற்றத்தை கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டும்''
இவ்வாறு அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டு்ள்ளது.
நடைபெறும் தேர்வு
10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 15ஆம் தேதி வரை இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை சுமார் 9 லட்சம் பேர் எழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.

