AISSEE 2025; மத்திய அரசின் சைனிக் பள்ளிகளில் சேரலாம்; விண்ணப்பிக்க இன்றே கடைசி- எப்படி?
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் நடத்தும் சைனிக் பள்ளிகளில் சேர நடத்தப்படும் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி.

சைனிக் பள்ளிகளில் 6 மற்றும் 9ஆம் வகுப்பில் சேர நடத்தப்படும் அகில இந்திய சைனிக் பள்ளிகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஜன.23) கடைசித் தேதி என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 33 சைனிக் பள்ளிகளில் சேர ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி என்றாலும் நாளை இரவு 11.50 மணி வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம். ஜனவரி 26 முதல் 28ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம். முன்னதாக ஜனவரி 13 விண்ணப்பிக்கக் கடைசித் தேதியாக இருந்த நிலையில், அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
2025ஆம் ஆண்டுக்கான தேர்வு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. பேனா - காகித முறையில் நேரடியாக தேர்வு நடைபெறுகிறது. இதில் மாணவர்கள் பல்குறி வகை கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
பொதுப் பிரிவினருக்கும் முன்னாள் ராணுவத்தினர், ராணுவத்தினர் வாரிசுகளுக்கும் ஓபிசி பிரிவினருக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.800 ஆகும். அதே நேரத்தில் எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு 650 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 190 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
வயது வரம்பு என்ன?
சைனிக் பள்ளிகளில் 6ஆம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, 2025ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி அன்று 10 முதல் 12 வயதுக்குள் இருக்க வேண்டும். காலி இடங்கள் இருப்பதைப் பொறுத்து மாணவிகளுக்கும் இடம் வழங்கப்படும். மாணவிகளுக்கும், அதே வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சைனிக் பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, 205ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி அன்று 13 முதல் 15 வயதுக்குள் இருக்க வேண்டும். அதேபோல அங்கீகாரம் பெற்ற பள்ளியில் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 6ஆம் வகுப்பு சேர்க்கைக்குக் குறிப்பிட்டதைப் போலவே 9ஆம் வகுப்பு மாணவிகள் சேர்க்கை நடத்தப்படும்.
சைனிக் பள்ளிகள்- ஓர் அறிமுகம்
சைனிக் பள்ளிகள் சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற ஆங்கில வழியில் கற்பிக்கும் உறைவிடப் பள்ளிகள் (residential schools) ஆகும். தேசிய ராணுவ அகாடமி, தேசிய கடல் படை மற்றும் பிற பயிற்சி அகாடமிக்களில் சேர சைனிக் பள்ளி மாணவர்கள் தயார் செய்யப்படுகிறார்கள்.
புதிய சைனிக் பள்ளிகளுக்கு அரசு அனுமதி அளித்து இருந்தது. தனியார் தொண்டு நிறுவனங்கள்/ தனியார் பள்ளிகள்/ மாநில அரசுகளுடன் இணைந்து இந்த பள்ளிகள் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள், ஹால்டிக்கெட் வெளியீடு உட்பட கூடுதல் விவரங்களை https://exams.nta.ac.in/AISSEE/ என்னும் இணையதளம் சென்று அறிந்து கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://aissee.nta.nic.in/

