தஞ்சை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்: வாலிபர் கைது
அதிகளவில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை மீன்பண்ணை வைத்திருப்பவர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
தஞ்சாவூர்: தஞ்சை அருகே மீன்பண்ணைக்கு கொண்டு செல்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,100 கிலோ அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை அருகே அய்யம்பேட்டை பகுதியில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி மீன்பண்ணைகளில் மீன்களுக்கு உணவுக்கு பயன்படுத்துவதாக தஞ்சை மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார் உத்தரவின் பேரில் திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் வினோத் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அய்யம்பேட்டையை அடுத்த புள்ளமங்கை கோவில் தெரு பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த வீட்டில் ரேஷன் அரிசி 1,100 கிலோ பதுக்கி வைத்து இருப்பது தெரிய வந்தது.
அய்யம்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வங்கி மீன் பண்ணைக்கு கொண்டு செல்வதற்காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக பிரபாகரன் (28) என்பவரை கைது செய்தனர்.மேலும் அவரிடம் இருந்து மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.
தேசிய அளவில் தமிழ்நாட்டில் தான் பொது வினியோகத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதாக சான்று அளிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு ரேஷன் கடைகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வினியோகிக்க நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் முறையான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் வினியோகத்தை கண்காணிக்கவும் பலதுறை அலுவலர்களை நியமித்துள்ளது. ரேஷன் கடைகளில் வினியோகத்தை கண்காணிக்க வழங்கல் துறை, கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக தனியாக உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.ஜி.பி. தலைமையில் மாநில அளவில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதிலும் தற்போது இம் மாதம் முதல் உணவு பொருள் கடத்தல் பிரிவுக்கு என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நுண்ணறிவு பிரிவு அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு வகையிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதிகளவில் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதை மீன்பண்ணை வைத்திருப்பவர்களுக்கு விற்பனை செய்கின்றனர். இது குறித்து சோதனை நடத்தப்பட்டு இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் மாவு மில்களும் ரேஷன் அரிசியை விற்பனை செய்கின்றனர். அந்தவகையில் தற்போது தஞ்சை அருகே மீன்பண்ணைக்கு கொண்டு செல்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1,100 கிலோ அரிசியை குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு போலீசார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குடிமைப்பொருள், 1,100 கிலோ அரிசி, பறிமுதல், வாலிபர் கைது