Crime: வேப்பம்பழம் பறிக்கச் சென்ற மூதாட்டிக்கு கழுத்தறுத்து கொலை ; கரூரில் பயங்கரம்
கன்னியம்மாள் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
![Crime: வேப்பம்பழம் பறிக்கச் சென்ற மூதாட்டிக்கு கழுத்தறுத்து கொலை ; கரூரில் பயங்கரம் Karur crime news killed an old lady near Karur by slitting her throat and robbed her of jewellery TNN Crime: வேப்பம்பழம் பறிக்கச் சென்ற மூதாட்டிக்கு கழுத்தறுத்து கொலை ; கரூரில் பயங்கரம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/20/037f1b48ba64d0efee69d8ee329d172c1689846100111113_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கரூர் அருகே மூதாட்டியின் கழுத்தை அறுத்து கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: கரூர் மாவட்டம், கடவூர் வட்டம் மத்தகிரி ஊராட்சி பள்ளிக் கவுண்டர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் முத்துச்சாமி. இவரது மனைவி கன்னியம்மாள். இவர்களுக்கு குழந்தை இல்லை. கன்னியம்மாள் தனது தங்கை வெள்ளையம்மாளை, முத்துசாமிக்கு 2 -வது திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிந்து வருகின்றனர். முத்துச்சாமி உடல் நலக்குறைவால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். வயது முதிர்வின் காரணமாக கன்னியம்மாள் தங்கை வெள்ளையம்மாளுடன் அவரது மகன் விஸ்வநாதனுடன் அதே பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். கன்னியம்மாள் தரிசுக்காட்டில் உள்ள வேப்பம் பழங்களை சேகரிக்க சென்றுவிட்டு மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு வந்தார். உணவு சாப்பிட்டு விட்டு மீண்டும் வேப்பம் பழங்களை சேகரிக்க சென்றுவிட்டார்.
இரவு 7 மணி வரை கன்னியம்மாள் வீட்டிற்கு வரவில்லை. சந்தேகம் அடைந்த உறவினர்கள் தரிசுக்காட்டிற்கு சென்று பார்த்தனர். கன்னியம்மாள் கழுத்து அறுக்கப்பட்டு, முகம் சிதைந்த நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கன்னியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து விஸ்வநாதன் சிந்தாமணிப்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கன்னியம்மாள் வேப்பம் பழங்களை சேகரிக்க சென்ற இடத்தில் கன்னியம்மாள் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச்சங்கிலி, காதில் இறந்த 1 பவுன் தங்கத்தோடு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)