குடிபோதையால் ஆட்டுக்கு பதிலாக ஆளை வெட்டிய கொடூரம் : ஆந்திராவில் அதிர்ச்சி..
ஆந்திராவில் ஆட்டுக்கு பதிலாக ஆளை வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிராமங்களில் கடவுள்களுக்கு ஆடு, கோழிகளை பலியிடுவது வழக்கம். தமிழ்நாடு கிராமங்களில் அந்த நிகழ்வு தனி திருவிழாவாகவும், பொங்கலையொட்டியும் நடைபெறும். அதுபோல் ஆந்திராவிலும் ஆடுகளை பலியிடும் நிகழ்வு நடக்கிறது. ஆனால், இந்தச் சம்பவத்தில் ஆடு வெட்டும் நிகழ்வு ஆளை வெட்டும் நிகழ்வாக மாறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகேயுள்ள வலசப்பள்ளியில் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக ஊர் எல்லையில் உள்ள எல்லாம்மா கோயிலுக்கு ஆடு, கோழி உள்ளிட்ட உயிரினங்களை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றுவது வழக்கம். இந்நிகழ்ச்சியில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆடு, கோழிகளை பலிகொடுப்பர்.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் நடைபெற்ற இந்த பலிகொடுக்கும் நிகழ்ச்சியில் நேர்த்திக்கடனுக்காக வைக்கப்பட்டிருந்த ஆடு ஒன்றை அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் பிடித்துக்கொண்டிருந்தார்.
அப்போது, ஆடுகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த சலபதி என்பவர் மது அருந்திவிட்டு போதையில் இருந்ததால் ஆடு என்று நினைத்து ஆட்டை பிடித்துக்கொண்டிருந்த சுரேஷ் கழுத்தில் ஓங்கி வெட்டியுள்ளார். இதனால் படுகாயம் அடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்தில் சாய்ந்தார்.
விபரீதத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் உடனடியாக சுரேசை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கழுத்தில் வெட்டுப்பட்டு உயிரிழந்த சுரேஷுக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர் .
சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தவறுதலாக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்திலும் விசாரணையை காவல் துறையினர் தொடர்ந்து நடத்திவருகின்றனர். ஆட்டுக்கு ஆளை வெட்டிய சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க:Dhanush Aishwaryaa Separation | ஐஷ்வர்யா மனதை மாற்றிய இமயமலைப் பயணம்! தனுஷை பிரிய இதுதான் காரணமா?
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

