Blockchain technology : பிளாக்செயின் தொழில்நுட்பத்தை ரத்துசெய்ய இருப்பதாக வரும் தகவல் முற்றிலும் தவறானது - நிதித்துறைச் செயலலாளர்
கிரிப்டோகரன்சி அல்லாத விசயங்களில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை மத்திய அரசு தடை செய்ய இருப்பதாக நிலவும் கருத்தை நிதித்துறை செயலாளர் சோமநாதன் மறுத்துள்ளார்
கிரிப்டோ கரன்சி அல்லாத விசயங்களில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை மத்திய அரசு தடை செய்ய இருப்பதாக நிலவும் கருத்தை நிதித்துறை செயலாளர் சோமநாதன் மறுத்துள்ளார். விவசாயத் துறை, நில உரிமை மற்றும் டிஜிட்டல் நில ஆவணங்களை பராமரிக்க பிளாக்செயின் தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, 2022-23 நிதியாண்டிலிருந்து இந்திய ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. மேலும், சந்தையில் உள்ள Bitcoin, Ethereum, NFT போன்ற இதர டிஜிட்டல் பணங்களை ரத்து செய்யவில்லை என்றாலும், கிரிப்டோகரன்சி போன்ற மெய்நிகர் நாணயங்கள் மூலம் கிடைக்கும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்தது.
சந்தையில் இருக்கும் பிட்காயின் போன்ற டிஜிட்டல் நாணயங்கள் பிளாக்செயின் ( Blockchain- நம்பிக்கை இணையத் தொழில்நுட்பம்)என்று அழைக்கப்படும் ஒரு வகை கணினி தொழில்நுட்ப முறையில் இயங்குகிறது. எனவே, இந்தியாவில் பிளாக்செயின் தொழில்நுட்பமும் வருங்காலங்களில் புறக்கணிக்கப்படலாம் என்ற கூற்று முதலீட்டாளர்களிடம் காணப்பட்டது.
Digital currency will be backed by RBI which will never be default. Money will be of RBI but the nature will be digital. Digital rupee issued by RBI will be a legal tender. Rest all aren't legal tender,will not,will never become legal tender:Finance Secy TV Somanathan
— ANI (@ANI) February 2, 2022
(File pic) pic.twitter.com/Cko0e4753X
இந்நிலையில், தொழில்நுட்ப முதலீட்டாளர்களை சந்தித்து பேசிய இந்திய நிதித்துறைச் செயலாளர் சோமநாதன் இதுதொடர்பான விளக்கங்களை அளித்தார். அதில், " கிரிப்டோகரன்சி அல்லாத விசயங்களில் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை மத்திய அரசு தடை செய்ய இருப்பதாக நிலவும் கருத்து தவறானது. உண்மையில், ப்ளாக்செயின் உள்ளிட்ட இதர வகை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திதான் இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணத்தை வெளியிட இருக்கிறது. முன்னதாக, காபி வாரியம் கூட தனது சேவைகளுக்கு பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறது. சுகாதாரம், வேளாண்மை, கல்வி போன்ற பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை புகுத்துவதன் மூலம் குடிமக்களுக்கு மேம்பட்ட சேவைகள் வழங்க முடியும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக, இந்திய அரசின் டிஜிட்டல் பணத்துக்கும், பிட்காயின் டிஜிட்டல் கரன்சிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் குறித்து பேசிய அவர், " ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பணத்தை நிர்வாகம் செய்யும். இது, திவால் ஆகும் சூழல்நிலை உருவாகாது. செலுத்துதல்/செலுத்துவதற்குரிய சட்டப்பூர்வ ஒப்பந்தமாக (Legal Tender) டிஜிட்டல் பணம் இருக்கும். சந்தையில் உள்ள Bitcoin, Ethereum, NFT போன்ற இதர டிஜிட்டல் பணங்கள் சட்டப்பூர்வ ஒப்பந்தமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இரண்டு நபர்கள் தங்களுக்குள் இலக்க மதிப்புகளை முடிவு செய்து கிரிப்டோ ஆதாரங்களை (Crypto assets)உருவாக்கிக் கொள்கின்றன. சந்தையில் உள்ள தனியார் டிஜிட்டல் பணத்தில் முதலீடு செய்பவர்கள், அது அரசின் அங்கீகாரம் பெறவில்லை என்பதை உணரவேண்டும். தங்கம், வைரம் போல் நீங்கள் டிஜிட்டல் பணத்தை வங்கலாம்/விற்கலாம். ஆனால், உரிய முழு மதிப்புத் தொகையை அரசு அங்கீகரிக்கவில்லை.
உங்கள் முதலீடு வெற்றியில் முடியுமா? நஷ்டத்தை ஏற்படுத்துமா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. ஒருவர் இழப்பை சந்தித்தால், அதற்கு அரசாங்கம் பொறுப்பேற்காது" என்று தெரிவித்தார்.