UPI Transaction: யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்..? - விளக்கம் அளித்த பேடிஎம்!
யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் எந்த வித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை என பேடிஎம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் எந்த வித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை என பேடிஎம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே யுபிஐ மூலம் ஆன்லைன் பணபரிவர்த்தனையானது நடைபெற்று வருகிறது. மக்களிடையே பணப்புழக்கத்தை குறைக்கும் பொருட்டு சில்லறை வணிக கடைகள் தொடங்கி மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் வரை யுபிஐ பணப்பரிவர்த்தனைகளை செயல்படுத்தி வருகிறது. இதற்காக கூகுள்பே, பேடிஎம், போன் பே போன்ற செயலிகள் மூலம் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையானது நடந்து வருகிறது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் இந்த பணப்பரிவர்த்தனை ஜெட் வேகத்தில் அதிகரித்தது.
இதனிடையே ஆன்லைனில் யுபிஐ மூலம் ரூ.2,000க்கும் அதிகமான வணிக ரீதியிலான பணப்பரிமாற்றங்களுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் என்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. என்பிசிஐ (National payments corporation of india) வெளியிட்ட அறிக்கையில், ரூ.2,000க்கும் அதிகமான தொகை பணப்பரிமாற்றம் செய்யும் சிறிய கடைகளுக்கு 1.1 சதவீதமும், அரசு நிறுவனங்கள் மியூச்சுவல் ஃபண்ட், காப்பீடு, ரயில்வே பணப்பரிமாற்றங்களுக்கு 1 சதவீதம் கட்டணமும் வசூல் செய்யப்படும் என கூறப்பட்டிருந்தது.
இதேபோல் பல்பொருள் அங்காடி 0.9 சதவீதமும், தொலைத்தொடர்பு அஞ்சலகம், கல்வி, வேளாண்டை, ரியல் எஸ்டேட் போன்ற பணப்பரிவர்த்தனைகளுக்கு 0.7 சதவீதமும், எரிபொருள் உபயோகத்திற்கான பணப்பரிவர்த்தனைக்கு 0.5 சதவீதம் கட்டணமும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் 250 மில்லியனுக்கும் அதிகமான தனிப்பட்ட பயனர்களும் மற்றும் ஐந்து கோடி வணிகர்களும் UPI பணப்பரிவர்த்தனையில் இணைந்துள்ளனர். அடுத்த நான்கு ஆண்டுகளில் கட்டண பரிவர்த்தனைகள் ஆண்டுக்கு ஆண்டு 16% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 2018-19 ஆம் நிதியாண்டிலிருந்து 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. 2018-19 ஆம் ஆண்டில் 2,326.02 கோடியும், 2021-22 ஆம் நிதியாண்டில் 7,197.68 கோடியாக அதிகரித்தது.
இந்நிலையில் யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் எந்த வித கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை என பேடிஎம் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது வங்கிக் கணக்கு அல்லது Paytm வாலட் மூலம் UPI மூலம் பணம் செலுத்துவதற்கு வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை. தயவு செய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என விளக்கம் அளித்துள்ளது.