Tesla Model X Review: டெஸ்லாவின் எக்ஸ் மாடல் காரின் சிறப்பு அம்சங்கள் என்ன? கவர்ச்சிகரமான விலை, வடிவமைப்பு
Tesla Model X Review: டெஸ்லா நிறுவனத்தின் எக்ஸ் மாடல் காரின் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முழு விவரங்களையும் இந்த தொகுப்பில் அறியலாம்.
டெஸ்லா மின்சார கார்:
டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்கு எப்போது வரும் என்பது இன்றளவும் ஒரு மர்மமாக தான் உள்ளது. அதேநேரம், இன்று உலகின் பெரும்பாலான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன. ஆனால், இதற்கு பிள்ளையார் சுழி போட்டது டெஸ்லா நிறுவனம் தான். மோட்டார்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயங்கி வந்த, ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையின் முகத்தையே டெஸ்லா நிறுவனம் மாற்றி அமைத்தது. மின்சார கார்களுக்கான உற்பத்தி ஆலையை மட்டுமின்றி, சார்ஜிங் நெட்வர்க்கையும் அந்நிறுவனம் கட்டமைத்துள்ளது. இன்று முக்கிய மின்சார கார் உற்பத்தியாளராக உள்ள டெஸ்லா நிறுவனத்தின், நிறுவனரான எலான் மஸ்கும் சர்வதேச அளவில் புகழ்பெற்றவராக உள்ளார். இந்நிலையில் மிகவும் பிரபலமான மற்றும் சொகுசு கார் பிரிவில் தவிர்க்க முடியாத சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட அந்நிறுவனத்தின் எக்ஸ் மாடல் கார் பற்றி இந்த தொகுப்பில் அறியலாம்.
டெஸ்லாவின் X மாடல் கார்:
டெஸ்லாவின் மாடல் 3 அல்லது சைபர்ட்ரக் ஆகியவற்றிற்கு கிடைத்த பிரமாண்ட வரவேற்பிற்கு முன்னதாக, அந்நிறுவனத்தின் முக்கிய அடையாளமாக மாடல் எஸ் மற்றும் எக்ஸ் கார்கள் தான் உள்ளன. குறிப்பாக மாடல் X, ஒரு பெரிய குடும்ப SUV ஆகும். இது ஒரு சூப்பர் காருக்கான இணையான ஆற்றலை கொண்டுள்ளது. மாடல் X மற்ற SUVகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. மற்ற கார்களுக்கு எதிராக மிக நேர்த்தியாக தெரிகிறது. கழுகை போன்று மேல்நோக்கி திறக்கப்படும் இதன் கதவுகள், காண்போரை பிரமிக்கச் செய்கின்றன.
சிறப்பம்சங்கள்:
இதில் 6 பேர் அமர்ந்து செல்லும் வகையில் விசாலமான இட வசதி உள்ளது. பனோரமிக் விண்ட்ஸ்கிரீன் சிறப்பான பயண அனுபவத்தை கொடுக்க, 17 இன்ச் தொடுதிரை காரின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்தும் திறனை தன்னகத்தே கொண்டுள்ளது. 22 ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், இன்-கார் கேமிங், ட்ரை-ஜோன் காலநிலை கட்டுப்பாடு ஆகியவற்றோடு, வேற்றுகிரக வாசிகளின் விமானத்தை ஓட்டுவதை போன்ற ஒரு அபாரமான அனுபவத்தையும் வழங்குகிறது. இதுபோன்ற வடிவமைப்பை தான் தற்போது பல்வேறு நிறுவனங்களும் பின்பற்றி வருகின்றன. ஆட்டோபைலட் உள்ளிட்ட பல தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. நான்கு கதவுகளும் எலக்ட்ரானிக் முறையில் திறந்து மூடப்படும். கீ ஃபோப் அல்லது டெஸ்லாவின் செயலி மூலமும் இயக்க முடியும்.
இன்ஜின் விவரங்கள்:
கியரை மாற்ற வேண்டும், இன்ஜின் சத்தம் போன்ற எந்தவொரு பிரச்னையும் இந்த காரில் இருக்காது. இதனுடைய வேகம் என்பது பயனாளரை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இதில் உள்ள டிவின் மோட்டர்கள் வெளிப்படுத்தும் இழுவை திறன் பிரம்மிக்க செய்கிறது. 1000bhp-க்கும் அதிகமான ஆற்றலை வெளிப்படுத்தும் திறனை கொண்டு, சூப்பர் காரையே மிஞ்சும் வகையிலான செயல்திறனை பெற்றுள்ளது. இந்த காரை அதிகபட்சமாக மணிக்கு 148-மைல் வேகத்தில் செலுத்தலாம். 3.8-வினாடிகளில் 0-60மைல் வேகத்தை எட்டும். ஒரு பெரிய குடும்பமே பயணிக்கும் வகையிலான SUVக்களில் இது மிகவும் வேகமானதாகும். இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் தூரம் வரை எளிதாக பயணிக்கலாம்.
விலை விவரங்கள்:
ஒருவேளை இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டால் சொகுசு எஸ்யுவி கார்களுக்கான பட்டியலில் தான் இடம்பெறும். இதன் விலை கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் வரையில் நிர்ணயிக்கப்படலாம். ஏற்கனவே இந்த விலையிலான காரை பலர் இறக்குமதி செய்து பயன்படுத்தி வருவதால், விலை ஒரு பிரச்னையாக இருக்காது என நம்பப்படுகிறது.
புகைப்படம்: Clinton Pereira