Royal Enfield: போடு வெடிய.. 650 சீரிஸில் ஆல்-பிளாக் வேரியண்டை அறிமுகம் செய்த ராயல் என்ஃபீல்ட்
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது இரண்டு 650 சீரிஸ் பைக் மாடல்களின், ஆல்-பிளாக் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது.
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது இரண்டு 650 சீரிஸ் பைக் மாடல்களின், ஆல்-பிளாக் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது.
ராயல் என்ஃபீல்ட்:
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக, தொடர்ந்து புதுப்புது மாடல் பைக்குகளை அறிமுகம் செய்து வருகிறது. அவ்வாறு வெளியாகி கவனம் பெற்ற மாடல்களில் பயனாளர்களின் எதிர்பார்ப்புகளை ஏற்று, அவற்றை மெருகேற்றி புதிய வேரியண்ட்களையும் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தனது இரண்டு 650 சீரிஸ் பைக் மாடல்களின், ஆல்-பிளாக் வேரியண்டை புதியதாக அறிமுகம் செய்துள்ளது.
ஆல்-பிளாக் வேரியண்ட்:
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் லண்டன் வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதன்படி, இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 மாடல்களின் ஆல்-பிளாக் வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆல் பிளாக் இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 ஆகிய இரு மாடல்களின் இன்ஜின் மற்றும் எக்சாஸ்ட் சிஸ்டத்தில் புதிய பெயிண்ட் தீம்கள் பிளாக்டு-அவுட் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இண்டர்செப்டார் 650 மாடல் பார்சிலோனா புளூ மற்றும் பிளாக் ரே என இரண்டு புதிய நிறங்களிலும், காண்டினெண்டல் ஜிடி650 மாடல் அபெக்ஸ் கிரே மற்றும் ஸ்லிப்ஸ்டிரீம் புளூ ஆகிய நிறங்களிலும் கிடைக்கிறது.
புதிய அம்சங்கள் என்ன?
புதிய வேரியண்ட்களில் முன்புறம் ஃபோர்க் டியூப்கள் மற்றும் ரியர் வியூ மிரர் பிளாக்டு-அவுட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. காஸ்மடிக் மாற்றங்கள் தவிர இரு மாடல்களின் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதன் டிசைன் மற்றும் தோற்றம் அதன் ஸ்டாண்டர்டு வெர்ஷன்களில் உள்ளதை போன்றே தொடர்கிறது. புதிய ஆல் பிளாக் வேரியண்ட்களில் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இவை ஸ்டாண்டர்டு மாடல்களில் உள்ளதை போன்றே 18 இன்ச் அளவு கொண்டுள்ளன. அதோடு, டியூப்லெஸ் டயர்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆல் பிளாக் இண்டர்செப்டார் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி 650 மாடல்களில் இன்ஜினும் அதன் ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ளதை போன்றே 648சிசி, பேரலல் டுவின், ஏர்/ஆயில் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இன்ஜின் 47 ஹெச்பி பவர், 52 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
கூடுதல் அம்சங்கள்:
தோற்றத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதோடு முகப்பு விளக்கில் எல்.ஈ.டி யூனிட் உள்ளது. இதன் ஸ்டாண்டர்டு மாடலில் ஹாலோஜன் செட்டப் வழங்கப்பட்டு உள்ளது. இதன் ஸ்விட்ச் கியர் மாற்றப்பட்டு புதிய மாடல்களில் சுழலும் ரக ஸ்விட்ச்கள் வழங்கப்பட்டுள்ளன. இதே போன்ற யூனிட்கள் சூப்பர் மீடியோர் 650 மாடல்களிலும் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் யுஎஸ்பி சார்ஜர் இடம்பெற்றுள்ளது. காக்பிட் பகுதி, மின்சார ரைடர் அம்சங்கள் அதன் ஸ்டாண்டர்டு மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பிற்கு இந்த மாடல்களில் டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.