ஒருமுறை சார்ஜ் செய்தால் 200கி.மீ...! இந்தியாவின் மிகக்குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் அறிமுகம்...
இந்தியாவின் மிகக்குறைந்த விலையிலான மின்சார காரை மும்பையை சேர்ந்த, PMV எலெக்ட்ரிக் எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலக அளவில் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் எரிபொருட்களின் விலை உயர்வு காரணமாக, பொதுமக்கள் பலரும் மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறி வருகின்றனர். இதன் காரணமாக கார் நிறுவனங்களும் மின்சார கார் உற்பத்தியில் தடம் பதித்து வருகின்றன. பல முன்னணி நிறுவனங்களும் பல்வேறு அம்சங்களுடன் புதுப்புது மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தினாலும், அனைவராலும் வாங்கும்படியாக அவற்றின் விலை இல்லை என்பதே உண்மை. டாடா நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட டியாகோ எனும் பெயரிலான மின்சார கார் தான் இதுவரையில், இந்தியாவிலேயே மிகக்குறைந்த விலையிலான மின்சாரக் கார் என கருதப்பட்டு வந்தது. அதன் ஆரம்ப விலையே, ரூ.8.49 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார்:
இந்நிலையில், இந்தியாவிலேயே மிகக்குறைந்த விலையிலான மின்சார கார் என குறிப்பிட்டு, மும்பையை சேர்ந்த PMV எலெக்ட்ரிக் எனும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் புதிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. EaS-E microcar என பெயரிடப்பட்டுள்ள இந்த காரின் விலை, ரூ.4.79 லட்சமாக இருக்கலாம் என தெரிவிகப்பட்டுள்ளது. அதேநேரம், முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த விலையில், கார் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ.2000 செலுத்தி PMV எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இணையதள முகவரியில், வாடிக்கையாளர்கள் காரை முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 6,000 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
courtesy: THE QUINT
காரின் வடிவமைப்பு:
மஹிந்திரா e2O கார் மாடல் தோற்றத்தை கொண்டுள்ள இந்த கார் ஒரே நேரத்தில், இரண்டு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை பயணிக்கும் அளவில் இடவசதியை கொண்டுள்ளது. 2,915மி.மீ. நீளம், 1,157 மி.மீ. அகலம் மற்றும் 550 கிலோ எடைகொண்ட இந்த காரின், முன் மற்றும் பின்பகுதிகளில் எல்இடி முகப்பு விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
காரின் சிறப்பம்சங்கள்:
12 குதிரைத்திறன் மற்றும் 50Nm டார்க் சக்தி கொண்ட பேட்டரி இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய EaS-E microcar, பூஜ்ஜியத்திலிருந்து 40 கிலோமீட்டர் வேகத்தை 5 வினாடிகளில் எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காரை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 200 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம் எனவும், குறைந்தபட்சம் 120 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் எனவும், PMV எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. டிஜிட்டல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, க்ரூஸ் கண்ட்ரோல், ரிமோட் பார்க் அசிஸ்ட் என ஒரு மின்சார காரில் எதிர்பார்க்கக் கூடிய அனைத்து அடிப்படை வசதிகளும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன. கருப்பு, அடர் பச்சை மற்றும் மஞ்சள் என 8 நிறங்களில் இந்த கார் சந்தையில் கிடைக்கும் நவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.