BAJAJ PULSAR: முடிவுக்கு வந்தது பெரும் சகாப்தம்.. பஜாஜ் பல்சர் பைக்கின் விற்பனை நிறுத்தம்
பஜாஜ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது பல்சர் 150 மாடல் மோட்டார் சைக்கிளின் விற்பனையை நிறுத்தியுள்ளது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பஜாஜ் பல்சர் நிறுவனம் முன்னணியில் உள்ளது. அதன் வளர்ச்சியில், பல்சர் 150 மற்றும் பல்சர் 180 மாடல்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. முதல் முறையாக கடந்த 2001ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் வகை மோட்டார் சைக்கிள்களின் சக்தி வாய்ந்த செயல்திறன் மற்றும் ஸ்போர்ட் புரொபைல் ஆகியவை இளைஞர்களை வெகுவாக கவர்ந்து இழுக்க, அந்த மாடல்கள் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக கடந்த ஆண்டுகளில் பல்சர் சீரிஸ் பஜாஜ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் கணிசமான பங்குகளை பெற்று உள்ளது.
பல்சர் மோட்டார் சைக்கிள் வரலாறு:
1980-90களில் பஜாஜ் நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. அப்போது சந்தையில் 100சிசி கம்பியூட்டர் ரக மாடல்கள் நல்ல வரவேற்பை பெற துவங்கின. இவை ஸ்கூட்டர்களை விட அதிக திறன் மற்றும் மைலேஜ் வழங்கின. இதன் காரணமாக மோட்டார்சைக்கிள் பிரிவில் கவனம் செலுத்த பஜாஜ் திட்டமிட்டது. அதன் காரணமாக 2001ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி வெளியிடப்பட்டது தான் பல்சர் 150 பை மோட்டார்சைக்கிள். அதைதொடர்ந்து, பல்சர் 180 மாடல் வெளியானது. அசத்தலான தோற்றம் மற்றும் அதிரடியான செயல்திறன் காரணமாக பல்சர் ட்வின் மாடல்கள் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றன.
பல்சர் 150 மாடல் விற்பனை நிறுத்தம்:
இந்நிலையில் தான் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பல்சர் 180 மாடலின் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டது. அதே போன்று பல்சர் 220 மோட்டர்சைக்கிள் உற்பத்தி கடந்த ஆண்டுm நிறுத்தப்பட்டு விட்டது. அதைதொடர்ந்து தற்போது, கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பஜாஜ் நிறுவனம் விற்பனை செய்து வந்த பல்சர் 150 மாடல் மோட்டார் சைக்கிள் விற்பனையையும் இந்திய சந்தையில் நிறுத்தியுள்ளது. இந்தியாவில் பஜாஜ் பல்சர் 150 மோட்டார்சைக்கிள்கள், பல்சர் 150 நியான், பல்சர் 150 சிங்கிள் டிஸ்க் மற்றும் பல்சர் டிவின் டிஸ்க் என மூன்று வகையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவற்றில் பல்சர் 150 நியான் மாடல், குறைந்த விலைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. பஜாஜ நிறுவனத்தின் அதிகம் விற்பனை செய்யப்பட்ட மோட்டர் சைக்கிளில் ஒன்றாக, பல்சர் 150 மாடல் உள்ளது.
புதிய பல்சர் P150 மாடல் விவரங்கள்:
இத்தகைய சூழலில் பல்சர் 150 மாடல் விற்பனை நிறுத்தபட்டாலும் அதற்கு மாற்றாக புதிய பல்சர் P150 மாடல் விற்பனை செய்யப்படுகிறது. பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் சீரிசை மாற்றியமைக்கும் திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பல்சர் 150 மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் P150 மாடல் முற்றிலும் புது டிசைன், மெல்லிய முகப்பு விளக்கு, ஸ்கல்ப்ட் செய்யப்பட்ட ஃபியூவல் டேன்க், ஸ்லிம் வெயிஸ்ட்லைன், அண்டர்பெல்லி எக்சாஸ்ட், க்ரிஸ்டலைன் எல்.ஈ.டி டெயில் லேம்ப் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது. இந்த மாடல் சிங்கில் டோன் மற்றும் டூயல் டோன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த பைக்கின் விலை ரூ.1.17 லட்சம் முதல் ரூ.1.20 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.