MG 4 Electric Crossover: ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் அறிமுகமாகிறது எம்ஜி 4 எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் மாடல் கார்
ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியில் எம்ஜி 4 எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் மாடல் கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
ஆட்டோ எக்ஸ்போ 2023
பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது புதிய வாகனங்கள் மற்றும் எதிர்கால திட்டங்களை, அறிவிக்கும் வகையில் கிரேட்டர் நொய்டா பகுதியில் நாளை தொடங்கி வரும் 18ம் தேதி வரையில் பிரமாண்ட ஆட்டோ எக்ஸ்போ 2023 நடைபெற உள்ளது. முன்னணி நிறுவனங்கள் இதில் பங்கேற்காவிட்டாலும், மாருதி சுசுகி, ஹுண்டாய், டாடா மோட்டார்ஸ், கியா, எம்ஜி மற்றும் டொயோட்டா உடன், ஒரே ஒரு சொகுசு கார் நிறுவனமாக லெக்சஸ் நிறுவனம் பங்கேற்க உள்ளது. அதோடு, இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களில் பெனெல்லி, கீவே, ஜோன்டெஸ், மோட்டோ மோரினி, மேட்டர், டார்க் மற்றும் அல்ட்ரா வயலட் ஆகியவை பங்கேற்க உள்ளன.
எம்ஜி நிறுவனத்தின் புதிய கார்:
இந்நிலையில், பிரபல கார் உற்பத்தி நிறுவனமான எம்ஜி, இரண்டு புதிய கார்களை ஆட்டொ எக்ஸ்போவில் காட்சிப்படுத்த உள்ளது. அதில், ஏர் காம்பேக்ட் எலெக்ட்ரிக் கார் மட்டுமின்றி, எம்ஜி 4 எலெக்ட்ரிக் கிராஸ் ஓவர் மாடல் காரையும் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
MG 4 மெலிதான எல்.ஈ.டி விளக்குகள் மற்றும் வளைந்த விகிதத்துடன் கூடிய ஆக்ரோஷமான உடல் வடிவமைப்பை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ஆரஞ்சு நிறத்தில் காட்சிப்படுத்த உள்ள இந்த காருக்கு ஸ்போர்ட்டி டச் வழங்கப்பட்டுள்ளது. பின்புற ஸ்டைலிங்கிலும் பெரிய டெயில் லேம்ப்கள் இடம்பெற்றுள்ளன, அவை காரின் முழு அகலத்திலும் பரவி ஸ்போர்ட்டி தோற்றத்தை வழங்குகிறது.
இதையும் படியுங்கள்: துணிவு பட நள்ளிரவுக் காட்சி ரத்து... சோகத்தில் அஜித் ரசிகர்கள்!
சிறப்பம்சங்கள்:
உலகளவில் MG 4 ஆனது ஒற்றை மோட்டாருடன் 51kWh அல்லது 64kWh பேட்டரியுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டாப்-எண்ட் கான்பிகரேஷனில் MG 4-ஐ ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 400 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. இந்த கார் 10.25 இன்ச் தொடுதிரை மற்றும் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. காரில் 'ஆக்டிவ் கிரில்' உள்ளது.
இந்திய சந்தைகளில், MG 4 ஆனது 360 டிகிரி கேமரா, ADAS அம்சங்கள் போன்ற பல பிரீமியம் அம்சங்களைப் பெறுகிறது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, MG 4 மாடல் காரானது ZS போன்று SUV தோற்றத்தை கொண்டிருக்காவிட்டாலும், சுவாரஸ்யமான ஸ்டைலிங் கொண்டுள்ளதால் வாடிக்கையாளர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. MG காரை 2023 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்துவதன் மூலம், அதற்கான வரவேற்பை அறிந்து அதை இந்தியாவில் வெளியிட வேண்டுமா இல்லையா என்பதை, எம்ஜி நிறுவனம் முடிவு செய்ய உள்ளது என கூறப்படுகிறது.