தொடர்ந்து தீப்பிடிக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்… பேட்டரி விதிமுறைகளை மாற்றி அமைக்கிறதா அரசு!
தேவைப்பட்டால், அரசு எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு விதிமுறை வழிகாட்டுதல்களை வழங்கும் என்றும், தரக் கட்டுப்பாட்டிற்கான நிலைகளை அரசு திருத்தும் என்றும் அந்த செய்தி கூறுகிறது.
கோடைகாலம் ஆரம்பித்த சில மாதங்களில் இதுவரை பல எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெப்பம் தங்கமுடியாமல் தீப்பிடித்து எரிந்து கருகியுள்ளன. எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் நிகழ்வுகள் சமீபத்தில் அடிக்கடி கேட்கும் ஒரு விஷயமாக உள்ளது. அப்படி சமீபத்தில் ஓலா, பியூர் EV, ஒகினாவா, பௌன்ஸ் போன்ற நிறுவனங்களின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிகின்றன. அப்படி பியூர் EV நிறுவனத்தின் நான்காவது எலக்ட்ரிக் ஸ்கூட்டராக வாரங்கல் அருகே ஒரு ஸ்கூட்டர் தீ பிடித்து எரிந்துள்ளது. கடந்த ஏழு மாதங்களில் இதுவரை நான்கு பியூர் EV ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்துள்ளன. ஏற்கனவே ஹைதெராபாத் நகரில் இரு தீ சம்பவங்களும் சென்னையில் ஒரு சம்பவமும் நடந்துள்ளன. தற்போது இந்த சம்பவமும் அதனுடன் சேர்ந்து விட்டது. இதனால் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி செலவை குறைக்க தரம் குறைந்த பேட்டரி பயன்படுத்துகின்றன என்பது தெளிவாக தெரிகிறது.
இதே போன்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் நிறுவனமும் பஜாஜ் நிறுவனமும் கூட தயாரிக்கின்றன ஆனால் அந்த ஸ்கூட்டர்களில் இதுபோன்ற நிகழ்வு ஒருமுறை கூட ஏற்பட்டதில்லை. இதனால் மக்கள் ஸ்டார்ட் அப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள் மீது நம்பிக்கை இழக்க தொடங்கிவிட்டனர். இதனை சரி செய்யும் விதமாக பேட்டரிகள், பேட்டரி மேலாண்மைக்கான அனைத்து சோதனை விதிமுறைகளும் திருத்தப்படுவதாக தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. Ola, Okinawa, Jitendra Electric மற்றும் Pure EV ஆகியவை எதிர்காலத்தில் இதுபோன்ற தீ விபத்துகளைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேவைப்பட்டால், அரசு எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளர்களுக்கு விதிமுறை வழிகாட்டுதல்களை வழங்கும் என்றும், தர உத்தரவாதம் மற்றும் தரக் கட்டுப்பாட்டிற்கான நிலைகளையும் அரசு திருத்தும் என்றும் அந்த செய்தி கூறுகிறது.
ஓக்கினோவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எறிந்த சம்பவங்கள் நடைபெற்ற பிறகு தமிழ்நாட்டில் டீலர்ஷிப் இழந்ததை அடுத்து, எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான 'ப்ரைஸ் ப்ரோ' ஏப்ரல் 16 ஆம் தேதி 3,215 யூனிட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை திரும்பப் பெற்றுக்கொண்டது. மார்ச் 28 அன்று, அரசு ஒரு நிபுணர்கள் குழுவை நியமித்தது, அந்த நிபுனர் குழு, ஏப்ரல் 7 ஆம் தேதி, ஓலா எலக்ட்ரிக் மற்றும் ஒகினாவா ஸ்கூட்டரின் தொழில்நுட்பக் குழுக்களை அழைத்து அவற்றின் எலக்ட்ரிக் வாகனங்கள் எரிந்தது குறித்து விளக்கம் கேட்டது. நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் கடந்த வாரம் ஏப்ரல் 13 ஆம் தேதி எரிந்து போன வாகங்களுடன் சேர்த்து தயாரிக்கப்பட்ட தொகுதிகளை தாமாக முன்வந்து திரும்பப்பெற்றுக்கொள்ள கேட்டுக்கொண்டார். முன்னதாக, அதிக வெப்பம் காரணமாக இந்த சம்பவங்கள் நடந்திருக்கலாம் என்று சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மக்களவையில் தெரிவித்துள்ளார்.