Electric SUV: தட்டுனா 500+KM ஓடும்.. புதுசா 4 மின்சார எஸ்யுவிக்கள் - கம்மி விலை, ப்ரீமியம் மாடல், டாப் ப்ராண்ட்
Upcoming Electric SUVs: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 500 கிலோ மீட்டர் ரேஞ்சுடன் விரைவில் அறிமுகமாக உள்ள, 4 புதிய மின்சார எஸ்யுவிக்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Upcoming Electric SUVs: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 500 கிலோ மீட்டர் ரேஞ்சுடன் விரைவில் அறிமுகமாக உள்ள, 4 புதிய மின்சார எஸ்யுவிக்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
புதிய மின்சார கார்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவை ஆட்டுவிக்கும் விதமாக, நான்கு புதிய மின்சார கார்கள் அடுத்தடுத்து வரும் மாதங்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நாட்டின் முன்னணி ப்ராண்ட்களான மாருதி, டாடா, மஹிந்த்ரா மற்றும் டொயோட்டா ஆகியவற்றின் கார்கள் தயாராகி வருகின்றன. வலுவான ரேஞ்ச், நவீன டிசைன் மற்றும் அண்மைக்கால அம்சங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தவும் முனைப்பு காட்டுகின்றன.
நிலைத்தன்மையில் எந்தவித சமரசமும் இல்லாமல், அளவு, தோற்றம் மற்றும் நடைமுறைக்கு உகந்ததாக இருப்பதால், மின்சார எஸ்யுவிக்கள் கார் பிரியர்களுக்கு உடனடி தேர்வாக மாறி வருகின்றன. இந்நிலையில் அறிமுகமாக உள்ள புதிய கார்கள் மூலம், இந்த பிரிவில் நிலவும் போட்டித்தன்மையானது அடுத்த கட்டத்திற்கு உயர உள்ளது.
500+KM ரேஞ்சுடன் அறிமுகமாகும் மின்சார கார்கள்:
1. டாடா சியாரா EV
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மிகவும் தனித்துவமான கார்களில் ஒன்றான சியாரா, பெரும் எதிர்பார்ப்புகளுடன் முற்றிலும் புதிய அவதாரத்தில் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளது. இந்த மாத இறுதியில் இன்ஜின் அடிப்படையிலான எடிஷன் அறிமுகப்படுத்தப்பட, அதைதொடர்ந்து 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் மின்சார எடிஷனும் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம். இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டு, அதிகபட்சமாக 500 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரீமியம் எடிஷனாக வரக்கூடும் என சொல்லப்படும் சியாராவில் 3 ஸ்க்ரீன் லே-அவுட் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோக, டெரெய்ன் ட்ரைவ் மோட்ஸ், வெண்டிலேடட் சீட்ஸ், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் லெவல் 2 ADAS அம்சங்களும் வழங்கப்படலாம். டாடாவின் மின்சார கார் போர்ட்ஃபோலியோவில் கர்விற்கு மேலே சியாரா நிலைநிறுத்தப்பட உள்ளது.
2. மஹிந்த்ரா XEV 9S
மஹிந்த்ரா நிறுவனம் தனது புதிய மின்சார கார்களுக்கான சகாப்தத்தை XEV 9S கார் மாடல் மூலம் தொடங்க உள்ளது. இது XUV700 மாடலின் முழு-மின்சார வழித்தோன்றலாக, XUV.e8 கான்செப்ட் அடிப்படையில் உற்பத்தி செய்யப்படுகிறது. வரும் நவம்பர் 27ம் தேதி விற்பனைக்கு கொண்டவரப்பட உள்ள இந்த காரானது, INGLO மாடுலர் மின்சார வாகனங்களுக்கான ப்ளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. இரண்டு பேட்டரி ஆப்ஷன்களை பெறும் என கூறப்படும் இந்த காரானது, அதிகபட்சமாக 500 கிலோ மீட்டர் தூரம் வரை ரேஞ்ச் அளிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
3. மாருதி சுசூகி e-விட்டாரா
மாருதி சுசூகியிடம் இருந்து நீண்ட நாட்களாக எதிர்பாக்கப்படும் e-விட்டாராவானது, நிறுவனம் தரப்பில் மின்சார பிரிவில் அறிமுகமாக உள்ள முதல் காராகும். அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள இந்த காரானது, குஜராத்தில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு, நெக்ஸா தளங்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. e-விட்டாராவில் 49KWh மற்றும் 61KWh பேட்டரி பேக்கை பெறுகிறது. காரை ப்ரீமியமாக மாற்றும் வகையில் பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் க்ளஸ்டர், பனோரமி சன்ரூஃப் மற்றும் ADAS ஆகிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் ஹுண்டாய் க்ரேட்டா, மஹிந்த்ரா XEV 9e மற்றும் டாடா ஹாரியர் மின்சார எடிஷன் ஆகியவற்றுடன் போட்டியட உள்ளது.
4. டொயோட்டா அர்பன் க்ரூசர்
அர்பன் க்ரூசர் BEV கார் மூலம் டொயோட்டாவும் மின்சார எஸ்யுவி பிரிவில் தனது ஓட்டத்தை தொடங்க உள்ளது. இது மாருதி சுசூகியின் e-விட்டாராவை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. சுசூகியின் ஹார்டெக்ட் e ப்ளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 5 சீட்டரானது, இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெறுகிறது. அதுபோக முற்றிலும் டிஜிட்டல் காக்பிட், டூயல் டிஸ்பிளேக்கள், வயர்லெஸ் சார்ஜிங், ஓவர் தி ஏர் அப்டேட்ஸ் மற்றும் முழுமையான அம்சங்களை உள்ளடக்கிய ADAS ஆகிய வசதிகளும் இடம்பெறக்கூடும். 2026ம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம்.





















