நெல்லுக்கு நல்ல ராசி... நீல பச்சை பாசி - தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர்
நீலப்பச்சைப்பாசி நல்ல சூரிய ஒளி உள்ள நீர்நிலையில் நன்றாக வளரும் தன்மை கொண்டுள்ளதால் குறுவை மற்றும் நவரைப் பட்டங்களில் நெற்பயிருக்கு சிபாரிசு செய்யப்படுகிறது.
தஞ்சாவூர்: நீல பச்சை பாசி... நெல்லுக்கு நல்ல ராசி... ஏக்கருக்கு 10 கிலோ பாசி. நட்ட 10 நாளில் போட யோசி என்று விவசாயிகளுக்கு நல்ல யோசனை வழங்குகிறார் தஞ்சை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா. நீல பச்சை பாசி நெல்லுக்கு சிறந்த நன்மைகள் அளிக்கும்.
நீலப்பச்சைப்பாசி என்பது நீர் தேங்கிய நிலையில் உள்ள இடங்களிலும், சூரிய ஒளி நன்கு படக்கூடிய இடங்களிலும் நன்றாக வளரும் தன்மை கொண்டது. இவை நீர் நிலைகளிலும், நெல் வயல்களிலும் களையாக வளரக்கூடிய சாதாரண பச்சைப்பாசி போல் அல்லாமல் இவை கருநீலம் கலந்த பச்சை நிறம் கொண்டிருக்கும். பச்சைப்பாசி போல் நெருக்கமான நார் போன்ற அமைப்பு இல்லாமல் வழுவழுப்பான தோற்றம் கொண்டவை. இவை பொதுவாக காலை நேரங்களில் மண்ணில் படிந்தும் வெயில் அதிகமாக உள்ள மதிய வேளைகளில் நீரின் மேல் மிதந்தும் காணப்படுகின்றன.
நீலப்பச்சைப்பாசி நல்ல சூரிய ஒளி உள்ள நீர்நிலையில் நன்றாக வளரும் தன்மை கொண்டுள்ளதால் குறுவை மற்றும் நவரைப் பட்டங்களில் நெற்பயிருக்கு சிபாரிசு செய்யப்படுகிறது. களிமண் கலந்த மண் வகைகளில் இந்த பாசியின் வளர்ச்சி அதிகமாகவும். செம்மண் மற்றும் மணற்பாங்கான நிலங்களில் வளர்ச்சி குறைந்தும் காணப்படும் நடுநிலை முதல் அதிக காரத்தன்மை உள்ள இடங்களில் வளர்ச்சி அதிகரித்தும், அதிக அமில நிலையில் வளர்ச்சி குறைந்தும் காணப்படும்.
உற்பத்தி செய்யும் முறை:
நீலப்பச்சைப்பாசியை நாற்றங்கால் அமைத்து வளர்த்து பின்பு நடவு வயலில் இடலாம். நன்கு சூரிய ஒளிபடும் இடத்தில் நாற்றங்காலை அமைக்க வேண்டும். ஒரு சென்ட் அளவுள்ள பாத்திகளை அமைத்து சேறு கலக்கி 3 முதல் 5 அங்குலம் வரை நீர் கட்ட வேண்டும். அசோலாவிற்கு நாற்றங்கால் தயாரித்தது போல் இதற்கும் உயர வரப்புகள் மற்றும் வாய்க்கால்கள் அமைத்தல் வேண்டும்.
ஒரு சென்ட் நாற்றங்காலுக்கு 2 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை பயன்படுத்த வேண்டும். நிலம் அதிக அமிலத்தன்மையை கொண்டதாக இருந்தால், அதன் அமிலத்தன்மையை சரி செய்ய 200 கிராம் சுண்ணாம்புச் சத்து இடவேண்டும். அதன் பின்பு 5 கிலோ நீலப்பச்சைப்பாசி கூட்டுக் கலவையை தூளாக்கி பொடி செய்து ஒரு சென்ட் பாத்தியில் சம அளவு தொழுஉரம் மற்றும் மண்ணுடன் இட வேண்டும்.
20 முதல் 30 நாட்களில் ஒரு சென்ட் பாத்தியிலிருந்து 15 முதல் 30 கிலோ வரை நீலப்பச்சைப்பாசி கிடைக்கும். நீர் வற்றும் வரை நிலத்தை நன்கு காயவிடும் போது நீலப்பச்சைப்பாசி அடை அடையாக பெயர்ந்து விடும். இதனை வெயில் காய வைத்து கோணிப்பைகளில் சேமித்து வைக்கலாம் அல்லது பாத்திகளில் உள்ள நீரை சல்லடை போன்ற அமைப்பின் வழியாக வெளியேற்றி நிலத்தை காய வைத்தும் எடுக்கலாம். நீரோடு சேர்ந்து நீலப்பச்சைப்பாசி வெளியேறிவிடாமல் இந்த சல்லடை அமைப்பு பாதுகாக்கும்.
முதல் அறுவடை செய்தபின், அதே அளவு அதாவது 200 கிராம் சூப்பர் பாஸ்பேட் சுண்ணாம்பு இட்டு 15 நாட்கள் கழித்து மீண்டும் அறுவடை செய்யலாம். இவ்வாறு எடுக்கப்பட்ட நீலப்பச்சைப்பாசி மேற்புறத்தில் பச்சை நிறத்திலும் அடிப்பகுதியில் மண் படிந்த ஏடுகளாகவும் இருக்கும். இவற்றை இரண்டு வருடங்கள் வரை சேமித்து வைக்கலாம். ஒரு சென்ட் பாத்தியில் நீலப்பச்சைப்பாசி உற்பத்தி செய்ய ஆகும் செலவு ரூ.100க்கும் குறைவு தான்.
நீலப்பச்சைப்பாசி இடும்முறைகள்:
நடவு செய்த ஏழு முதல் பத்து நாட்களில் எக்டருக்கு 10 கிலோ நீலப்பச்சைப்பாசியை 25 கிலோ தொழு உரம் அல்லது 25 கிலோ மண்ணுடன் கலந்து இட வேண்டும். இதனால் நெல் பயிருக்கு சிறந்த நன்மைகள் அளிக்கிறது.