ஆற்றில் குதிக்க ஓடிய திருநங்கை! காப்பாற்றிய பத்திரிகையாளர்கள்! போராட்டத்தின் பின்னணி?
போராட்டத்தின் போது ஆற்றில் குதிக்க ஓடிய திருநங்கையை பத்திரிகையாளர்கள் தடுத்து காப்பாற்றிய சம்பவத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நெல்லை நரசிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த 20க்கும் மேலான திருநங்கைகள் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் குதித்தனர். அதேபோல் குடும்ப அட்டை, ஆதார் அட்டையை முறையாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து மனு அளித்துள்ளனர். ஆனால் தொடர்ந்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த திருநங்கைகள் போராட்டத்தில் இறங்கினர்.
ஆரம்பத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் செய்த திருநங்கைகள், 15 நிமிடங்களுக்கு பிறகு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது. இந்தநிலையில் திருநங்கை ஒருவர் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து குதிக்க ஓடிச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் உடனடியாக ஓடிச்சென்று அவரை தடுத்து காப்பாற்றியுள்ளனர். துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய பத்திரிகையாளர்களை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. இதனால் 2 தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
அந்த நேரத்தில் வெளியே வந்த மாவட்ட ஆட்சியரின் காரையும் திருநங்கைகள் தடுத்ததால் அதிகாரிகள் உடனடியாக அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.





















