நீர்வளத்துறையில் சாதி செ.பெருந்தகை சொன்னது உண்மை? வெளியான திடுக்கிடும் தகவல்கள் | Selvaperunthagai VS Duraimurugan |
செம்பரம்பாக்கம் அணைத் திறப்பிற்கு தன்னை ஏன் அழைக்கவில்லை என ஆவேசமான செல்வபெருந்தகை பேசினார். அண்மையில் சாதி தலைவிரித்து ஆடுவதாகவும், நீர்வளத்துறையில் அதிகாரிகள் தன்னிடம் காட்டிய ஏற்ற தாழ்வு குறித்தும், அயோக்கியன் அமர்ந்துகொண்டு கொட்டம் அடிப்பதாக பேசியது தமிழக அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் உண்மையில் நீர்வளத்துறையில் என்ன தான் பிரச்சனை? உண்மையில் குறிப்பிட்ட சாதியினருக்கே போஸ்டிங் போட படுகிறதா? என ஏபிபி நாடு அலசியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சாதியை அடிப்படையாக வைத்து நியனமங்களும், உயர் பதவிகள் வழங்கபடுவதும், குறிப்பாக கோடிகளில் புரளும் பிராஜெக்ட் என்றால், அதில் குறிப்பிட்ட சாதியை சேர்ந்த பொறியாளர்கள் மட்டுமே நியமிக்கபடுவது என நீர்வளத்துறைக்குள் எப்போது வேண்டுமானாலும் அணையை உடைத்துக்கொண்டு வெள்ளம் பெருக்கெடுக்கும் சூழ்ல் நிலவுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஏற்கனவே பல்வேறு குற்றச்சாட்டுகள், புகார்கள், முறைகேடுகள், அமலாக்கத்துறை வழக்குகள் என சிக்கல்களை சந்தித்துக்கொண்டிருக்கும் சென்னை மண்டல முதன்மை பொறியாளர் பொதுப்பணித் திலகத்திற்கு ஏற்கனவே விதிகளுக்கு முரணாக பதவி வழங்கப்பட்டதாக வெளியான சூடே இன்னும் குறையாமல் இருக்கிறது
இந்த நிலையில், எரியும் தீயில் பெட்ரோலை ஊற்றுவது போல் அமைந்துள்ளது பாலாறு வட்டத்தில் கண்காணிப்பு பொறியாளராக நியமிக்கபட்டிருக்கும் செல்வக்குமார் என்பவரின் நியமனம்.
பொதுப்பணி திலகம், செல்வக்குமார் இந்த இருவரின் நியமனத்திலும், விதிகள் பின்பற்றபடாமல் காற்றில் பறக்கவிடப்பட்டதற்கான காரணம், அவர்கள் இருவருமே அமைச்சர் துறைமுருகனின் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பது தான் என்று சொல்லபடுகிறது.
மேலும், தனக்கு இணை தலைமை பொறியாளர் என்ற உயர்பதவி கிடைத்தும், அதை விட குறைந்த போஸ்டிங்கான கண்கானிப்பு பொறியாளர் பதவியிலேயே இருந்துகொள்கிறேன் என்று எந்த அதிகாரியாவது சொல்லி கேள்விபட்டதுண்டா? ஆனால் அப்படி ஒரு கூத்தும் இந்த நியமனத்தில் நடந்துள்ளதாக குமுறுகிறார்கள் நீர்வளத்துறை அதிகாரிகள் சிலர்.
கடந்த மே மாதம் வெளியான அரசாணையில் கண்காணிப்பு பொறியாளராக செல்வக்குமாருக்கு பதவி உயர்வு தரப்படுகிறது. அடுத்த படியாக உடனே அவருக்கு Joint Chief Engineer (General), இணை தலைமை பொறியாளர் என்ற உயர் பதவியும் வழங்கப்பட்டது.
ஆனால், அந்த பதவிக்கு சென்றால் அலுவலகத்திற்கு உள்ளேயே முடங்க நேரிடும் என்று யோசித்த செல்வக்குமார், அரசின் அரசாணையை கூட மதிக்காமல், நான்கு மாதங்கள் விடுப்பில் சென்றுள்ளார். நியாயப்படி பார்த்தால் ஒரு அரசு அதிகாரி தனக்கு வழங்கப்பட்ட பதவியை ஏற்க மறுப்பது கடுமையான ஒழுங்கு மீறல் இதற்கு துறை ரீதியாக செல்வக்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது நீர்வளத்துறை சார்பில் வெளியாகியுள்ள அரசாணையில் பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் செல்வக்குமார்.
இந்த நியமனத்தின் பின்னணியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் தலையீடும், துறை செயலாளரான ஜெயகாந்தனின் தலையீடும் இருப்பதாக குமுறலை வெளிப்படுத்தியுள்ளனர் அதிகாரிகள்.
குறிப்பாக, சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான JICA (Japan International Corporation Agency) இணை நிதி திட்டங்களும், திருப்போரூர் அருகே உருவாக்கப்படும் புதிய அணைத் திட்டமும் நேரடியாக பாலாறு வட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளது. அதனால், இந்த பகுதியின் நிர்வாக பொறுப்பை தனது நம்பிக்கைக்குரிய, தன்னுடைய சமுதாயத்தை சேர்ந்த செல்வக்குமாரிடம், அமைச்சர் துறைமுருகனும் செயலாளர் ஜெயகாந்தனும் ஒப்படைத்துள்ளதாக குற்றச்சாட்டு வெடித்திருக்கிறது.
ஏற்கனவே காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை பட்டியலினத்தவர் என்ற காரணத்தால் தான் புறகணிக்கப்பட்டதாக பொதுவெளியில் போட்டுடைத்தது சூட்டை கிளப்பியுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் இது குறித்து செல்வபெருந்தகையிடம் பேசியதாக் தெரிகிறது.
இந்நிலையில் சாதி ரீதியிலான நியமனம், விதிகளை மீறிய பதவி, பாலாறு வட்டத்தில் செயல்படுத்தப்படவிருக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் திட்டங்களுக்காகதான் செல்வகுமார், அங்கு கண்காணிப்பு பொறியாளராக நியமிக்கப்பட்டாரா ? என்ற கேள்வியை நீர்வளத்துறை செயலாளர் திரு.ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ் அவர்களிடம் எழுப்பினோம்,
அதற்கு அவர், ஏற்கனவே நியமிக்கப்பட்ட பதவி மற்றும் இடத்தில் உடல்நலக்குறைவு காரணமாக பணியாற்ற முடியாத சூழலை குறிப்பிட்டு செவக்குமார் கடிதம் எழுதியதாகவும், பருவ மழை காலங்களில் அவர் அங்கு பணியாற்ற இயலாத வகையில் அவரது உடல்நலன் இருப்பதால் அவரை பாலாறு வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளராக நியமித்ததாக விளக்கம் அளித்துள்ளார். ஏனினும் இதை தவிர்த்து அவர் வேறு எந்த விளக்கமும் தரவில்லை என்பது குறிப்பிடதக்கது.
மழை, வெள்ளக் காலங்கள்தான் நீர்வளத்துறைக்கு முக்கியமான காலக் கட்டம் அந்த காலக்கட்டத்தில் அலுவலகத்தில் இருந்து பணியாற்ற முடியாத செல்வகுமார் பாலாறு வட்ட திட்ட கண்காணிப்பாளராக எப்படி பணியாற்றுவார் ? ஒருவேளை அவர் பணியாற்றும் இடத்தில் மட்டும் பருவகாலம் மாறாதா ? என்ற கேள்வி எழாமல் இல்லை





















