திடீரென சரிந்த மேடை படி கிழே விழுந்த MLA-க்கள்”ஐயோ பாத்து சார்”பதறிய காட்சி | Chidambaram
சிதம்பரத்தில் விசிக பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணியை பார்வையிட சென்றபோது, தற்காலிக படிக்கட்டு சரிந்து விழுந்தது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ-க்கள் இருவர், கீழே விழுந்து இடிப்பாடுகளில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக அறிவிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் வருகின்ற ஆறாம் தேதி சிதம்பரத்தில் தேர்தல் அங்கீகார வெற்றி விழா கொண்டாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதற்காக மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணியினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும், விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமார், மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். பாலாஜி, பனையூர் பாபு உள்ளிட்டோர் பணிகளை பார்வையிட வந்தனர். அவர்கள் மேடை மீது ஏறுவதற்காக தற்காலிக படிக்கட்டு அமைக்கப்பட்டிருந்தது.
முதலில் படிக்கட்டில் ஏறி எம்.பி. ரவிக்குமார் மற்றும் உள்ளூர் நிர்வாகிகள் இருவரும் மேடைக்கு சென்றனர். அவர்களுக்கு பின்னால் எம்எல்ஏக்கள் பாலாஜி, பனையூர் பாபு உள்ளிட்டோர் சென்றனர். அப்போது மேடையின் மேல் நெருங்குவதற்கு முன்பாக கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென படிக்கட்டு சரிந்து விழுந்தது.
இதில் எம்எல்ஏக்கள் பாலாஜி, பனையூர் பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் 3 பேர் உள்ளிட்ட 5 பேர் கீழே விழுந்தனர். மேலும் அவர்கள் இடிபாடுகளிலும் சிக்கினர். இதனால் பதற்றமடைந்த அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் உடனடியாக அவர்களை தூக்கி மீட்டனர். இந்த சம்பவத்தில் திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ பாலாஜி கையில் லேசான காயம் ஏற்பட்டது. மேடைக்கு செல்லும் படிக்கட்டு இடிந்து அதனால் எம்எல்ஏக்கள் இருவர் விழுந்தாலும் பெரிய அளவில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படாததால் விசிக நிர்வாகிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.





















