Subramanian swamy slams Modi : ”பிரதமர் பதவிக்கு ஆப்பு! செப்.17 வர தான் டைம்”எச்சரிக்கும் சு.சுவாமி
75வது பிறந்தநாளுக்கு பிறகு பிரதமர் மோடி ஓய்வை அறிவிக்கவில்லையென்றால், அவர் வேறு வழிகளில் பிரதமர் பதவியை இழக்க நேரிடும் என எச்சரித்துள்ளார் சுப்ரமணியன் சுவாமி.
பாஜகவை பொறுத்தவரை 75 வயது ஆகிவிட்டால் ஓய்வு பெற்றுவிட வேண்டும் என்பது விதி. 75 வயதுக்கு மேல் யாரும் அதிகாரம் செலுத்தக் கூடிய ஆட்சிப் பொறுப்பை வகிக்க முடியாது என்ற பேச்சு இருக்கிறது. அந்தவகையில் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் ஓய்வை அறிவித்தனர். எடியூரப்பா கர்நாடக முதலமைச்சர் ஆனதை சுட்டிக்காட்டி, இதில் விதிவிலக்கும் இருப்பதாக பாஜக தரப்பில் இருந்தே பதிலும் வருகிறது. தற்போது பிரதமர் மோடிக்கு 73 வயதாகும் நிலையில் அவர் ஓய்வை அறிவிப்பாரா என்று எதிர்க்கட்சிகள் டார்கெட் செய்து வருகின்றனர்.
75 வயதில் பிரதமர் மோடி ஓய்வு பெறத் தயாரா? என்று காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மக்களவை தேர்தல் சமயத்திலேயே கேள்வியை எழுப்பினர். மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்துவதை சுட்டிக்காட்டி இந்த கேள்வி எழுந்தது. எல்.கே.அத்வானி உள்ளிட்ட பாஜகவின் மூத்த தலைவர்கள் 75 வயதுக்கு பிறகு மார்க்தர்ஷன் மண்டல் என்ற குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சிக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்காக இந்த குழு அமைக்கப்பட்டது.
பிரதமர் மோடி ஓய்வை அறிவிப்பாரா என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நேரத்தில், பாஜகவை சேர்ந்த சுப்ரமணியன் சுவாமியும் இதே விமர்சனத்தை வைத்துள்ளது கவனம் பெற்றுள்ளது. இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘பிரதமர் மோடி செப்டம்பர் 17ம் தேதி 75வது பிறந்தநாளுக்கு பிறகு மார்க் தர்ஷன் மண்டலுக்கு தனது ஓய்வை அறிவிக்கவில்லையென்றால், அவர் வேறு சில வழிகளில் தனது பிரதமர் பதவியை இழக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார்.
அதாவது பிரதமர் மோடி அடுத்த ஆண்டு தனது ஓய்வை அறிவிக்க வேண்டும் என சொல்லியுள்ளார் சுப்ரமணியன் சுவாமி. கடந்த சில நாட்களாகவே அரசியல் வட்டாரத்தில் இந்த பேச்சு தொடர்ந்து கொண்டே இருப்பது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.