அதிமுகவில் இருந்து OUT! செங்கோட்டையன் நீக்கம்! ஆக்ஷன் எடுத்த EPS
அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி அதிரடி காட்டியுள்ளார் இபிஎஸ்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் கட்சிக்குள் சேர்க்க வேண்டும் என காலக்கெடு விதித்த முன்னாள அமைச்சர் செங்கோட்டையனின் பதவிகளை பறித்தார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ். அதன்பிறகு சைலண்ட் மோடுக்கு போனார் செங்கோட்டையன். அவரிடம் இருந்த ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியை எம் எல் ஏ ஏ.கே.செல்வராஜிடம் ஒப்படைத்தார் இபிஎஸ். இபிஎஸ்-ஐ வழிக்கு கொண்டு வரலாம் என கணக்கு போட்ட செங்கோட்டையனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்தநிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னுக்கு ஓபிஎஸ் உடன் ஒன்றாக காரில் சென்றார் செங்கோட்டையன். இவர்களுடன் டிடிவி தினகரனும் இணைந்து 3 பேரும் ஒன்றாக தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர். 3 பேரும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது பின்னர் எங்கள் அணியில் செங்கோட்டையன் இணைந்ததில் மகிழ்ச்சி என பேசினார் டிடிவி தினகரன்.
அதேபோல் செங்கோட்டையன் நீக்கமா என்ற கேள்வி வந்த போது நடவடிக்கை எடுக்கப்படும் என இபிஎஸ் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இன்று சேலத்தில் நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். செங்கோட்டையன் மீதான நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை நடந்துள்ளது. இந்த நிலையில் செங்கோட்டையனை அதிமுகவில் இருந்து நீக்கியுள்ளார் இபிஎஸ். இதுதொடர்பான அறிவிப்பில், ‘கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும் கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும். அவர்களுடன் ஒன்றிணைந்து கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்ற காரணத்தினாலும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த
K.A.செங்கோட்டையன், M.L.A.இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.





















