அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்திக்கு ராகுல் காந்தி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது..
அயோத்தியில் 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின், 24 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு சென்ற நேரு குடும்பத்தைச் சேர்ந்த முதல் தலைவர் ராகுல் காந்திதான். கடந்த 2016ல் உத்தரபிரதேச தேர்தலுக்கு முன்பாக ராகுல் அயோத்தி சென்று அனுமன் கோயிலில் வழிபாடு நடத்தினார். அதன் பின் அயோத்தி ராமர் கோவிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது வரை ராகுலும் அவரது கட்சியினரும் அயோத்தி செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
கடந்த 2024ல் ராமர் கோயில் பிரதிஷ்டையின் போது கூட ராகுல் காந்தி அயோத்தி செல்லவில்லை. அயோத்தி ராமர் கோவில் திறப்புக்கு எதிராக கடும் விமர்சனங்களையும் தொடர்ந்து முன்வைத்து வந்தனர் காங்கிரஸார்.இந்நிலையில் தற்போது மீண்டும் 10 வருடங்களுக்கு பிறகு ராகுல் அயோத்தி செல்லவுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது..பாதுகாப்பு அமைச்சகத்தின் 32 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்ற நிலைக்குழு ஜனவரி 23 அன்று அயோத்திக்குச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வருகையாளர்களின் பட்டியலில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், 2024-ல் நடந்த கும்பாபிஷேகத்தின் போது கோயில் கட்டுமானம் முழுமையடையாமல் இருந்ததால் ராகுல் காந்தி அப்போது பங்கேற்கவில்லை. ஆனால் தற்போது கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிந்துவிட்டதால் அவர் தரிசனத்திற்குச் செல்வதாக காங்கிரஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள் அல்ல காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கோ அல்லது ஆன்மீக நம்பிக்கைகளுக்கோ எதிரானது அல்ல என்பதைத் தெளிவுபடுத்தவே இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ராகுலின் அயோத்தி வருகை குறித்து பாஜகவினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ராகுலின் தேர்தல் ஸ்டண்ட்கள் எதுவும் எடுபடாத காரணத்தினால் தற்போது இந்துக்கள் அரசியலை கையில் எடுத்துள்ளார். எனினும் அவர் ராமர் பற்றி அவதூறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். அதனால் மன்னிப்பு கோரியபின் தான் ராகுல் அயோத்தி செல்லவேண்டும் என கூறி வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அயோத்தி வருகை குறித்து அவர் தரப்பிலிருந்தோ அல்லது கட்சித் தரப்பிலிருந்தோ இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கு முன்பாக அவருடைய தந்தையும், மறைந்த முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி கடந்த 1990-ம் ஆண்டு அயோத்தி சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





















