தவெகவை டிக் அடித்த OPS? செங்கோட்டையனின் HINT! விஜய்யின் புது கணக்கு
இபிஎஸ் உடன் இணைந்து பயணிக்க வேண்டாம் என நினைக்கும் ஓபிஎஸ், தவெக பக்கம் சாய்வதற்கு முடிவெடுத்துள்ளதாக பேச்சு அடிபடும் நிலையில், அதற்கான ஹிண்ட்டையும் கொடுத்துள்ளார் செங்கோட்டையன். விஜய்யும் சில கணக்குகளை போட்டு சீனியர்களை கட்சிக்குள் கொண்டு வருவதாக சொல்கின்றனர்.
அதிமுக பாஜக கூட்டணி அமைந்த பிறகு பாஜக கூட்டணியில் இருந்து ஓரங்கப்பட்ட ஓபிஎஸ் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் குழப்பத்தில் இருந்தார். பின்னர் பாஜகவுடனான தனது கூட்டணியை முறித்துக் கொண்டு வெளியேறினார். மீண்டும் அதிமுகவிற்குள்ளும் கூட்டணிக்குள்ளும் நுழைந்துவிட முயற்சி செய்த ஓபிஎஸ்-க்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்தநிலையில் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ்-ம் டிடிவி தினகரனும் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. திமுக மற்றும் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியானது. அதிமுகவுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் தமிழ்நாடு வந்தார். அப்போது இபிஎஸ்-ம் அவரும் ஓபிஎஸ், டிடிவி தினகரன் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்பட்டது.
இதனை தொடர்ந்து சென்னை வேப்பேரியில் ஆதரவாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் ஓபிஎஸ் பேசும்போது, வரும் நாட்களில் எடப்பாடி பழனிசாமிக்கு தகுந்த பாடம் புகட்டுவோம் என சொல்லி ட்விஸ்ட் கொடுத்தார். அ.தி.மு.க.வை தவிர வேறு எந்த கூட்டணியிலும் இணைவோம் என வைத்திலிங்கம் பேசியதை வழிமொழிவதாகவும் கூறினார். முன்னதாக சென்னை வேப்பேரியில் நடைபெற்ற ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான மாவட்ட செயலாளர் கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைக்க விரும்புகிறீர் என மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
திமுகவையும், தவெகவையும் ஆப்ஷனில் வைத்த நிலையில் பெரும்பாலானோர் தவெகவுக்கு டிக் அடித்ததாக சொல்கின்றனர். ஓபிஎஸ்-ம் அதே விருப்பத்திலேயே இருப்பதாக தெரிகிறது. திமுகவை காட்டிலும் தவெகவுடன் கூட்டணி வைத்தால் கட்சியில் தனக்கான செல்வாக்கு அதிகம் இருக்கும் என ஓபிஎஸ் கணக்கு போட்டுள்ளார்.
இந்தநிலையில் ஓபிஎஸ்-ம் டிடிவியும் தவெகவுடன் பேசிக் கொண்டிருப்பதை தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனும் உறுதி செய்துள்ளார். விரைவில் நல்ல முடிவு வரும் என்றும் ஹிண்ட் கொடுத்துள்ளார். இதன் அறிகுறியாகவே ஈரோடு கூட்டத்தில் செங்கோட்டையனை தொடர்ந்து நிறைய பேர் வருவார்கள் என விஜய் பேசியதாக சொல்கின்றனர். கரூர் சம்பவத்திற்கு பிறகு அரசியல் அனுபவம் வாய்ந்தவர்களை கட்சிக்கள் இழுத்தால் தனக்கு பலமாக இருக்கும் என நினைத்து விஜய்யும் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.





















