”வர முடியுமா? முடியாதா?” விடாமல் துரத்தும் அமித்ஷா! விஜய்க்கு காத்திருக்கும் ஆப்பு
பாஜக கூட்டணிக்கு வர மாட்டேன் என்று விஜய்யும், எப்படியாவது கூட்டணிக்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் என அமித்ஷாவும் முரண்டு பிடித்துக் கொண்டிருப்பதாக சொல்கின்றனர். அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வரும் போது விஜய்யை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும், எதுவும் ஒத்துவரவில்லை என்றால் விஜய்க்கு ஆப்பு வைக்கும் வகையில் ஒரு முடிவெடுக்கவிருப்பதாகவும் பேசப்படுகிறது.
2026 சட்டப்பேரவை தேர்தலை குறிவைத்து களமிறங்கியுள்ள விஜய், தேர்தலில் தனித்து களமிறங்குகிறாரா கூட்டணி அமைக்கப் போகிறாரா என்பது இன்னும் கேள்வியாகவே இருக்கிறது. முதல் தேர்தலிலேயே முதலமைச்சர் வேட்பாளர் இடத்தை யாருக்கும் விட்டுக் கொடுக்க விஜய் தயாராக இல்லை. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்று பேசினாலும் கூட்டணிக்கான கதவுகளை திறக்காமலே வைத்துள்ளார். இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்துவிட வேண்டும் என்ற டார்கெட்டில் இருக்கும் பாஜக, விஜய்யை கூட்டணிக்கு இழுப்பதற்கான வேலைகளை செய்து வருகிறது. ஆனால் பாஜகதான் கொள்கை எதிரி என்று சொல்லிவிட்டு கூட்டணிக்கு சென்றால் முதலில் கோணம் முற்றிலும் கோணல் கதையாகிவிடுமோ என பயந்து விஜய் ஒதுங்கி நிற்பதாக சொல்கின்றனர்.
ஆரம்பத்தில் விஜய்யுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டிய அதிமுக தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கிவிட்டதாக தெரிகிறது. தவெக தலைமையில் தான் கூட்டணி, விஜய் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று பொதுக்குழுவில் தீர்மானமே நிறைவேற்றிய பிறகு, விஜய் கூட்டணி நமக்கு தேவையில்லை என்ற முடிவுக்கு அதிமுகவினர் வந்துவிட்டதாக சொல்கின்றனர். விஜய்யின் வாக்கு வங்கியே இன்னும் தெரியவில்லை, அவர் இல்லாமலேயே நாம் தேர்தலில் வெற்றி பெற முடியும் என அதிமுகவினர் உறுதியாக இருக்கின்றனர்.
ஆனால் விஜய்யை கூட்டணிக்கு கொண்டு வந்தே ஆக வேண்டும் என்ற முடிவில் இருந்து அமைச்சர் அமித்ஷா இறங்கவே இல்லை என்ற பேச்சு இருக்கிறது. அடுத்த முறை தமிழ்நாடு வரும் போது கூட்டணி கணக்குகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமித்ஷா கணக்கு போட்டுள்ளார். கூட்டணி கட்சித் தலைவர்களை மட்டுமல்லாமல் விஜய்யையும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்கின்றனர். விஜய்யை சந்திக்க முடியவில்லை என்றாலும் தவெக தரப்பில் முக்கிய புள்ளிகளை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்த அமித்ஷா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இருந்தாலும் விஜய் இப்போது அமித்ஷாவை சந்திக்க தயாராக இல்லை என சொல்கின்றனர். கரூர் சம்பவம் தவெகவுக்கு அடியாக மாறிய நிலையில் அதனை வைத்து பாஜக பக்கம் விஜய்யை இழுத்துவிடலாம் என பாஜக போட்ட கணக்கும் ஒத்துவரவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து விஜய் ஆறுதல் சொன்ன பிறகு மீண்டும் தேர்தல் அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டதால் பாஜகவை கண்டுகொள்ளவில்லை.
எதுவும் ஒத்துவரவில்லை என்றால் சிபிஐ வைத்து அமித்ஷா விஜய்க்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. கரூர் சம்பவ வழக்கை தற்போது சிபிஐ விசாரணை வளையத்தில் தான் இருக்கிறது. அதனை வைத்து விஜய்யை கண்ட்ரோலில் எடுக்கும் வேலையும் நடக்க வாய்ப்புள்ளதாக சொல்கின்றனர்.





















