”வாங்க TTV.. இனி தான் ஆட்டம்” அன்போடு வரவேற்ற EPS!குஷியில் அதிமுக, அமமுக
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ள டிடிவி தினகரனுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் இபிஎஸ்.
மக்களவை தேர்தலின் போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார் அமமுக பொதுச்செயலாளர் இபிஎஸ். அதிமுகவுடன் பாஜக கைகோர்த்த பிறகு டிடிவி ஓரங்கட்டப்பட்டார். அதன்பிறகு அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் மீது தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வந்தார். அவரை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இபிஎஸ் க்ரீன் சிக்னல் கொடுத்தார்.
இந்தநிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைவது உறுதியாகியுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தமிழ்நாட்டில் மக்கள் விரும்புகிற நல்லாட்சிக்கு எங்களுடைய ஆதரவைத் தெரிவிக்கிறோம். என்றைக்கும் விட்டுக்கொடுத்துப் போகிறவர்கள் கெட்டுப் போவதில்லை. என்னதான் இருந்தாலும் இது பங்காளிச் சண்டை. 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்' என ஏற்கெனவே நான் பொதுக்குழுவில் சொன்னேன்” என பேசியிருந்தார்.
இதனை தொடர்ந்து பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலையும் நேரில் சந்தித்தார் டிடிவி. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவருக்கு சால்வை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். பின்னர் பாஜகவினருடன் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார் டிடிவி.
இந்தநிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்துள்ள டிடிவி தினகரனுக்கு இபிஎஸ் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில், ‘தீயசக்தி திமுக-வின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளியை வைத்திடவும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் அமைத்திட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டிடிவி தினகரன் அவர்களை அன்போடு வரவேற்று, அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்ப ஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக்_காப்போம், தமிழகத்தை_மீட்போம்” என தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைந்தது அதிமுக மற்றும் அமமுக தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.





















