Arun IPS : தப்பியோடிய ரவுடி..சுட்டுப்பிடித்த போலீஸ்!பாராட்டிய அருண் IPS
சென்னையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடியை துணிச்சலாக சுட்டுப்பிடித்த உதவி காவல் ஆய்வாளரை சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
சென்னை செம்மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் ரவுடி ரோகித் ராஜ், இவர் மீது மூன்று கொலை வழக்கு உள்பட 17 வழக்குகள் நிலுவையில் உள்ளன, இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ரோகித் ராஜை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இறுதியில் தேனியில் வைத்து ரவுடி ரோகித் ராஜை தனிப்படை காவல்துறையினர் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். சேத்துப்பட்டில் ரோகித் ராஜ் பதுக்கி வைத்துள்ள ஆயுதங்களை கைப்பற்ற காவல் துறையினர் அவரை அழைத்துச்சென்றுள்ளனர்.
அப்போது ரோகித் ராஜ் இரு காவலர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் தற்காப்பிற்காக உதவி காவல் ஆய்வாளர் கலைச்செல்வி ரோகித் ராஜின் காலில் சுட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ரவுடி தற்போது கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் மூன்று கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை துணிச்சலாக துப்பாக்கியால் சுட்டு கைது செய்த உதவி ஆய்வாளர் கலைச்செல்வியை, சென்னை காவல் ஆணையாளர் A.அருண் நேரில் அழைத்து பாராட்டினர்.