Vanitha vijayakumar இதெல்லாம் ஒரு காரணமா.. - வனிதாவிற்கு ரம்யா கிருஷ்ணன் பதிலடி
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து வனிதா விஜயகுமார் விலகியது குறித்து நிகழ்ச்சி நடுவர் ரம்யா கிருஷ்ணன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? விஜய் தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக பல்வேறு பொழுதுபோக்கு அதுவும் ஹிட் நிகழ்ச்சிகளில் பணியாற்றி வருபவர் வனிதா விஜயகுமார். ஏற்கெனவே இவர் பிக் பாஸ் சீசன் 3, குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிகளில் விஜய் டிவியுடன் கைகோத்து பணியாற்றினார். கடைசியாக பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் பணியாற்றிவந்தார். இந்நிகழ்ச்சி தற்போது தான் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், போட்டியிலிருந்து அவர் திடீரென விலகியுள்ளார். அவமானப்படுத்தப்பட்டேன், மோசமாக நடத்தப்பட்டேன் அதனால் தான் நிகழ்ச்சியிலிருந்து விலகினேன் என மிக நீண்ட விளக்கமொன்று அளித்திருந்தார். இந்நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணனும் பங்கேற்றுள்ளார். 4 எபிஸோட்களே முடிந்த நிலையில் வனிதா விஜயகுமார் போட்டியிலிருந்து விலகினார். இது குறித்து ரம்யா கிருஷ்ணன், போட்டியில் நான் 10க்கு ஒரு மதிப்பெண் கொடுத்ததெல்லாம் ஒரு காரணம் எனக் கூறுகிறார்கள். இதெல்லாம் ஒரு பிரச்சினையே கிடையாது. மற்றபடி அவர் ஏன் விலகினார் என்று அவரிடமே கேளுங்கள் என்று கூறியுள்ளார். வனிதாவின் நீண்ட விளக்கம்: "பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் எனது காளி அவதாரத்துக்கு ரசிகர்களாகிய நீங்கள் காட்டிய ஆதரவுக்கு நன்றி. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை விட்டு நான் வெளியேறுவதற்கு முன், சில விஷயங்களைப் பகிர விரும்புகிறேன். ஒருவர் கொடுமைப்படுத்துவதை, துன்புறுத்துவதை நான் என்றும் ஏற்க மாட்டேன். அது யாராக இருந்தாலும், என் குடும்பத்தினராக இருந்தாலும் சரி. இது உலகறிந்த விஷயம். பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்தே விஜய் டிவி எனது குடும்பமாகிவிட்டது. குக்கு வித் கோமாளி, கலக்கப்போவது யாரு என அவர்களோடு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். எங்களுக்குள் பரஸ்பர புரிதலும் மரியாதையும் இருக்கிறது. அது இனியும் தொடரும். ஆனால் பணிசெய்யும் இடத்தில் முறையற்ற நடத்தையை ஒருபோதும் ஏற்க முடியாது. நான் ஒரு மோசமான நபரால் துன்புறுத்தப்பட்டேன், அவமானப்படுத்தப்பட்டேன், மோசமாக நடத்தப்பட்டேன். அவருக்கு திமிர் அதிகம். பணியிடத்தில் பெண்களை ஆண்கள் மட்டும் மோசமாக நடத்துவதில்லை, பெண்களே பெண்களை அதை விட மோசமாக நடத்துகின்றனர். வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் இளைஞர்களைக் ஏளனமாகப் பார்ப்பதும், அவர்களை அவமானப்படுத்துவதையும் பார்க்க வேதனையாக இருக்கிறது. குறிப்பாக குடும்பத்தின், கணவரின் ஆதரவு இல்லாமல் சாதிக்கும், வெற்றி காணும், 3 குழந்தைகளின் தாயை இப்படியா நடத்துவார்கள்? பெண்கள், சக பெண்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும். மாறாக அவர்களின் வாழ்க்கையை மோசமாக மாற்றக் கூடாது. ஆனால், இங்கே அதுதான் நடக்கிறது. பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விடை பெறுவது வருத்தம் தான். மற்ற அத்தனை போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள். எந்தப் போட்டியிலும் வெற்றி மட்டுமே முக்கியமல்ல. சவாலை சமாளிப்பதே மிக முக்கியம். என்னை மன்னித்துவிடுங்கள் சுரேஷ் சக்ரவர்த்தி. எனக்கு எது சரியோ அதை நான் செய்கிறேன். என்னால் நீங்களும் இந்த நிகழ்ச்சியை விட்டு நீங்க வேண்டியதாகிவிட்டது. ஆனால் எனது முடிவுக்கு ஆதரவு கொடுத்த நீங்கள் உண்மையான நண்பர்" இவ்வாறு வனிதா விஜயகுமார் கூறியிருக்கிறார். அவர் மறைமுகமாக ரம்யா கிருஷ்ணனைத் தான் கூறியிருக்கிறார் என்று வனிதாவின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.